Published : 13 Jul 2022 09:02 PM
Last Updated : 13 Jul 2022 09:02 PM

“திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை அனுப்பலாம்” - எஸ்இடிசி பேருந்து லக்கேஜ் பகுதி இனி வாடகைக்கு!

சென்னை: எஸ்இடிசி பேருந்துகளில் உள்ள லக்கேஜ் பகுதிகள் வாடகைக்கு விடப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், "அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் 3-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும் இதன் மூலம் அனுப்பலாம்.

இதனை, சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x