Published : 13 Jul 2022 10:43 AM
Last Updated : 13 Jul 2022 10:43 AM

கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் 

சென்னை: " மக்களுக்கும், நீதிபதிகளுக்குமான விகிதாச்சாரம் இந்திய சராசரியை விட தமிழகத்தில் மோசமாக உள்ளது. இந்திய அளவில் 50,726 பேருக்கு ஒரு நீதிபதி இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டில் 60,240 பேருக்குத் தான் ஒரு நீதிபதி இருக்கிறார். அதிலும் காலியிடங்களை கழித்தால், 75,973 பேருக்குத் தான் ஒரு நீதிபதி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க இது எந்த வகையிலும் போதாது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், காலியாக உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் தவிர, கீழமை நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. சட்டம் - ஒழுங்கு, குற்றங்கள், சொத்து சிக்கல் தொடர்பான வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் தான் விசாரிக்கப் படும். இந்த நீதிமன்றங்களுக்கு மாவட்ட நீதிபதிகள் நிலையில் 339 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக மூத்த சிவில் நீதிபதிகள்/ தலைமை மாஜிஸ்திரேட்/ மாஜிஸ்திரேட் நிலையில் 347 பணி இடங்களும், சிவில் நீதிபதிகள் நிலையில் 642 நீதிபதிகள் வீதம் மொத்தம் 1328 பணியிடங்கள் உள்ளன.

ஆனால், இந்த 3 வகையான பணியிடங்களில் முறையே 58, 55, 136 பணியிடங்கள் என மொத்தம் 249 இடங்கள் காலியாக உள்ளன. இவர்கள் தவிர அயல்பணியில் சென்றவர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களையும் சேர்த்தால் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 275 ஆக அதிகரிக்கும். இது மொத்த பணியிடங்களில் 20.70% ஆகும். ஐந்தில் ஒரு பங்கு நீதிபதிகள் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு, வழக்குகளை குறித்த காலத்தில் விசாரிக்க முடியாமல் கீழமை நீதிமன்றங்கள் தடுமாடுகின்றன. அதனால் வழக்குகள் தேங்குகின்றன.

இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 7,77,209 சிவில் வழக்குகள், 6,34,525 குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 14,11,734 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 2,03,781 வழக்குகள் 5 ஆண்டுகள் முதல் பத்தாண்டுகள் வரை நிலுவையில் உள்ளன. 6,41,563 வழக்குகள் இரு ஆண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை கிடப்பில் கிடக்கின்றன. இதனால் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 9-வது இடத்தில் உள்ளது. கேரளம், ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற தமிழகத்தை விட சிறிய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவு தான். ஆனாலும், மக்களுக்கு தாமதமின்றி நீதி வழங்குவதற்கான அளவுகோலின்படி பார்த்தால் தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும்.

இந்திய நீதித்துறையின் பெரும் சாபக்கேடு போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் நியமிக்கப்படாதது தான். இந்தியாவில் அனைத்து நிலை நீதிபதிகளையும் சேர்த்து 50,726 பேருக்கு ஒரு நீதிபதி மட்டும் தான் நியமிக்கப்படுகிறார். அதனால் தான் இந்தியாவில் 4.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டு கூட நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைய வில்லை. மாறாக நிலுவையிலுள்ள வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, 1,82,000 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இது எந்த வகையிலும் நியாயமில்லை.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் தமிழகத்தில் அனைவருக்குமே நீதி மறுக்கப்படுவதாகத் தான் கருத வேண்டும். சாதாரண வழக்குகள் கூட ஆண்டுக் கணக்கில் விசாரிக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது. மக்களின் பிரச்சினைகள் குறித்த காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், மக்களுக்கும், நீதிபதிகளுக்குமான விகிதாச்சாரம் இந்திய சராசரியை விட தமிழகத்தில் மோசமாக உள்ளது. இந்திய அளவில் 50,726 பேருக்கு ஒரு நீதிபதி இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டில் 60,240 பேருக்குத் தான் ஒரு நீதிபதி இருக்கிறார். அதிலும் காலியிடங்களை கழித்தால், 75,973 பேருக்குத் தான் ஒரு நீதிபதி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க இது எந்த வகையிலும் போதாது.

எனவே, மக்களுக்கு குறித்த காலத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய, தமிழக நீதித்துறையில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x