Last Updated : 23 May, 2016 04:50 PM

 

Published : 23 May 2016 04:50 PM
Last Updated : 23 May 2016 04:50 PM

உடுமலையில் வலுவிழக்கும் திமுகவின் உட்கட்டமைப்பு

உடுமலையில் திமுக வேட்பாளர் தோல்விக்கு கட்சியின் உட்கட்டமைப்பு சரியில்லாதது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியை 7-வது முறையாக அதிமுக வென்றுள்ளது. இத்தொகுதியில் வெற்றி பெற்ற கே.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இத்தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது.

திமுகவில் இம்முறை வாரிசுகளுக்கு பெரும்பாலும் வாய்ப்பளிக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனுக்காக அவரது மகன் மு.க.முத்துவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் 5,687 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

1951-ல் உருவான இத்தொகுதியில் காங்கிரஸ் இதுவரை 3 முறை வென்றுள்ளது. 1967-ம் ஆண்டுக்கு பிந்தைய கால கட்டங்கள் முழுவதும் திமுக மற்றும் அதிமுகவின் கோட்டையாக மாறியது. திமுக 4 முறையும், அதிமுக 7 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையை கொண்ட உடுமலை நகராட்சிப் பகுதியில் ஒப்பீட்டளவில் அதிமுக வேட்பாளருக்கு குறைவான வாக்குகளும், திமுக வேட்பாளருக்கு அதிகமான வாக்குகளும் கிடைத்துள்ளன.

உடுமலை தொகுதியில் மொத்தமுள்ள 283 வாக்குச்சாவடிகளில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 45 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் வாக்குச்சாவடி எண் 230, 238, 240, 241, 251, 258, 262 உட்பட பல வாக்குச் சாவடிகளில் திமுக வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை அதிகம். இன்னும் கூடுதலாக திமுகவுக்கு வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும், அது கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டுக்கு பின்பு திமுகவின் உட்கட்டமைப்பு சரியத் தொடங்கியதும், அதனை அதற்கடுத்ததாக வந்த நிர்வாகிகள் சரிசெய்யாமல் போனதும் தான் திமுக வேட்பாளரின் தோல்விக்கு காரணம் என்கின்றனர்.

இது குறித்து திமுகவினர் கூறும்போது, ‘அதிமுகவை பொறுத்தவரை ஒரே தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். திமுகவைப் பொறுத்தவரை தலைவர்கள் தொண்டர்களை தேடிச் செல்லும் இயக்கமாக இருந்தது. உடுமலையை பொறுத்தவரை 1978 முதல் 1993 வரை நிர்வாகியாக இருந்த என்.எஸ்.மணி வார்டு வாரியாகச் சென்று தொண்டர்களை சந்தித்தார். அதனால் கீழ் தட்டு மக்கள் வரை எளிதாக அணுகும் வாய்ப்பால், கட்சியின் உட்கட்டமைப்பு வலுவாக மாறியது.

1996-க்குப் பிறகு பொறுப்புக்கு வந்தவர்கள், ஆட்சி அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, மேல் தட்டு மக்களுடன் நிறுத்திக் கொண்டனர். படிப்படியாக கீழ் தட்டு மக்கள் யாரும் அணுக முடியாத நிலைக்கு கட்சியைக் கொண்டு சென்றனர். உடுமலை நகரத்தை பொறுத்தவரை இன்னும் கூடுதல் வாக்குகளை பெற்றிருக்க வேண்டிய தொகுதி. அவ்வாறு வாக்குகள் கிடைத்திருந்தால் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும்’ என்றனர்.

உடுமலையை பொறுத்தவரை 1996-க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக வெற்றி பெறவில்லை. இம்முறை அறிமுகம் இல்லாத வேட்பாளர் என்ற ரீதியில் கட்சிக்குள் சில எதிர்ப்புகள் இருந்தபோதும், மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு பின்பு நிர்வாகிகள் இணைந்து வெற்றிக்காக உழைத்தனர்.

உட்கட்டமைப்பை சீரமைப்பதன் மூலம் அடுத்து வரும் உள்ளாட்சியிலாவது இழந்த வாய்ப்பை பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x