Published : 11 Jul 2022 09:10 AM
Last Updated : 11 Jul 2022 09:10 AM

3 கி.மீ தொலைவுக்கு ரூ.5 லட்சத்தில் மண் சாலை: விவசாயிகளின் ஒற்றுமையால் குடவாசல் அருகே அசத்தல்

குடவாசல் அருகே சீதக்கமங்களத்திலிருந்து பனைக்கரை வரை விவசாயிகள் தங்களது சொந்த செலவில் புதிதாக அமைத்துள்ள சாலையை நேற்று திறந்து வைக்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள். (அடுத்த படம்) விவசாயிகள் புதிதாக அமைத்துள்ள மண் சாலை.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விவசாயிகள் 11 பேர் ஒன்றிணைந்து, தங்களது நிலத்தில் தேவையான இடத்தை ஒதுக்கி, பிற விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ.5 லட்சத்தில் மண் சாலை அமைத்துள்ளதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

குடவாசல் அருகேயுள்ள சீதக்கமங்களம் கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த வயல்களுக்குச் சென்று வர பாதை வசதி இல்லை. இதனால், வயலுக்குத் தேவையான விவசாய இடு பொருட்கள் மற்றும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, விவசாயிகள் வயல் வரப்பு மூலமாகவே மிகவும் சிரமப்பட்டு எடுத்துச் சென்று வந்தனர்.

இதனிடையே, சீதக்கமங்களம் ஊராட்சியைச் சேர்ந்த மேலராமன் சேத்தி வெள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த சுசிலா, சீனிவாசன், மோகனசுந்தரம், அன்பழகன், பக்கிரிசாமி, குழந்தை யேசு, சிவா, சண்முகம், ரமேஷ், ஜார்ஜ், செல்வராஜ் ஆகிய விவசாயிகள் 11 பேர், பாதைப் பிரச்சினைக்குத் தீர்வு காண திட்டமிட்டனர். இதன்படி, தங்களது விளை நிலங்கள் வழியாக சாலை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஒதுக்கினர். மேலும், தங்களது சொந்த நிதி மற்றும் பிற விவசாயிகளின் பங்களிப்புடன் ரூ.5 லட்சத்தில் சீதக்கமங்களத்திலிருந்து பனைக்கரை வரை 3 கி.மீ தொலைவுக்கு மண் சாலை அமைத்தனர். இந்தப் பணியை மேலராமன் சேத்தியைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை, அன்பழகன், ஆ.ராஜ், ப.ராஜ் ஆகியோர் முன்னின்று மேற்கொண்டனர். கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நேற்று மண் சாலை பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் சாலையைத் திறந்துவைத்தார்.

அரசின் உதவியை நாடாமல், தாங்களே ஒன்றிணைந்து விவசாயிகள் சாலை அமைத்துள்ளதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். 11 பேர் ஒன்றிணைந்து அமைத்துள்ள இந்தச் சாலை 200-க்கும் அதிகமான விவசாயிகளுக்குப் பயன் அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மழைக் காலத்தில் இந்த மண் சாலையில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயணிப்பது சிரமமாக இருக்கும் என்பதால், அரசு தார் சாலை அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x