Published : 09 Jul 2022 06:52 PM
Last Updated : 09 Jul 2022 06:52 PM

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: அழைப்பு மையங்கள் மூலம் 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அழைப்பு மையங்கள் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 84 நாட்களில் ரூ.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல் துறையில் 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு அமல்படுத்தப்பட்டது. தொடக்க காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்தபோதிலும், காலப்போக்கில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தவில்லை. இதை சரி செய்ய கடந்த ஏப்ரல் மாதம் அழைப்பு மையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்படி 12 காவல் அழைப்பு மையங்களின் மூலம் தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக 11.04.2022 முதல் 03.07.2022 வரையிலான 84 நாட்களில் 2,19,742 பழைய வழக்குகளுக்கான அபராதத் தொகை ரூபாய் ரூ.3,31,49,275 விதிமீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அழைப்புச் செய்து 1,674 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1,68,60,000/- அபராதமாக வசூலிக்கப்பட்டது. பெரும்பாலனோர் சராசரியாக ரூபாய் 10,000/- அபராதம் செலுத்தியுள்ளனர். இதன்படி மொத்தம் 2,21,416 பழைய வழக்குகளில் ரூ. 5,00,09,275/- அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், 2,58,835 புதிய வழக்குகளுக்காக ரூ.6,31,58,750 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதன்படி 84 நாட்களில் 4,80,251 வழக்குகளில் மொத்தம் ரூ.11,31,68,025/- அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு காவல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x