Last Updated : 09 Jul, 2022 06:24 AM

 

Published : 09 Jul 2022 06:24 AM
Last Updated : 09 Jul 2022 06:24 AM

தென்பெண்ணை ஆற்று நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுமா?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்று நீரை, ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்பெண்ணையாறு, கர்நாடக மாநிலம், நந்திமலையில் உற்பத்தியாகி, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வந்தடைகிறது. இங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும், தென்பெண்ணை ஆற்று நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பியும், மற்ற இடங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் மேய்ச்சல் நிலமாகவும் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், தென் பெண்ணை ஆற்று நீரை கால்வாய்கள் அமைத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயிகள் நீண்ட காலமாக முன்வைத்து உள்ளனர்.

திட்ட மதிப்பீடு

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறும்போது, தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 மாதங்களாக ஆயிரம் கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இதன் மூலம் இணைப்பு கால்வாய்கள் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரம் ஏரிகளுக்கு நீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக வாணி ஓட்டு திட்டம், அலியாளம் தடுப்பணையை உயர்த்தி கட்டுதல், இருமத்தூர் கால்வாய் திட்டம், பாம்பாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இதில் சில திட்டங்களுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. ஆனால் அவை செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளன.

நீர்ப்பாசன திட்டங்கள்

மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் செல்லும் உபரி நீரை முறையாக பயன்படுத்தினால், விவசாயம் செழிக்கும், காய் கறிகள், பூக்கள் உற்பத்திபெருகும். குடிநீர் தேவை யும் பூர்த்தியாகும். எனவே, தமிழக அரசு தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களையும், அனைத்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல புதிய கால்வாய்கள் அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x