Published : 08 Jul 2022 04:15 PM
Last Updated : 08 Jul 2022 04:15 PM

மேகேதாட்டு விவகாரம் | “ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயத்தில் தமிழகம்” - வேல்முருகன்

மேகேதாட்டு பகுதி.

சென்னை: “தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் கர்நாடகம், மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1974க்கு பிறகு கர்நாடக அரசு எந்த காலத்திலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கியதில்லை. காவிரி நடுவர்மன்ற இடைக்கால உத்தரவுப்படி மாதவாரியாக 205 டி.எம்.சி தண்ணீரையோ, இறுதித் தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீரையோ அல்லது உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி 177.25 டி.எம்.சி. தண்ணீரையோ, ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் வரை மாதவாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கியதில்லை.

இந்த நிலையில், கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டினால், தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீர், முற்றாக நின்றுபோய் விடும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழர்களின் குமுறல். கடந்த காலங்களில், மத்திய அரசின் முறைப்படியான எந்த ஒப்புதலும் பெறாமல் காவிரி மற்றும் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் வரும் துணை ஆறுகளில் கபினி அணை, ஹேரங்கி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி என நீர்தேக்கங்களை கட்டியதன் காரணமாகவே, தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் குறைந்தது.

தற்போது மேகேதாட்டு அணையை கட்டுவதன் மூலமாக, தற்போது குறைந்த அளவில் வரும் நீரையும் தடுக்கப் பார்க்கிறது கர்நாடக அரசு. காவிரியில் கர்நாடகத்திற்கான நீர் ஒதுக்கீடு 270டி.எம்.சி மட்டுமே. ஆனால், துணை ஆறுகள் வாயிலாக, 300க்கு மேலான டி.எம்.சி நீரை தேக்கி வைத்துள்ள கர்நாடக அரசு, 410 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு அணை பற்றி விவாதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசின் எதிர்ப்பு நிலை காரணமாக ஏற்கெனவே ஜூன் 17, 23, ஜூலை 6 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அதி தீவிரமாக செய்து வருகிறது. கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் மேகேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. இவர்கள் கட்சி பேதமின்றி கன்னடர் என்ற ஒற்றைப் புள்ளியில் நிற்கின்றனர்.

ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், பேருந்து நிறுத்தம், ரயில் மறியல்கள் என்ற பல்வேறு வடிவங்களில் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களால், குறைந்த பட்ச அளவிலான காவிரி நீர் உரிமையையாவது நாம் தக்க வைத்து இருக்கிறோம். இந்த உரிமைக்காக, கர்நாடகாவில் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டுள்ளனர். போராட்டக்களத்தில் உயிர் நீத்துள்ளனர்.

மேகேதாட்டுவில் அணை கட்ட உரிமை இல்லாத கர்நாடக அரசும், அம்மாநில எதிர்க்கட்சி காங்கிரசும், மத்திய மோடி அரசும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தரும், மேக்கேதாட்டு அணைக் கட்டுவதில், காட்டும் தீவிரத்தை பார்க்கும் போது, காவிரிக்கும், தமிழர்களுக்குமான உறவு அற்றுப்போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதில் பட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் இடதுசாரி கட்சிகளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து நிற்பது மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது.

மேகேதாட்டு திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு ஒன்றிய ஜல்சக்தி துறைக்கு மோடி அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதே நேரத்தில், தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் கர்நாடகம், மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் ஓரணியாய் நின்று போராட வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்பட்டுள்ளது'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x