Published : 06 Jul 2022 05:41 PM
Last Updated : 06 Jul 2022 05:41 PM

மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும்: அன்புமணி

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக தேர்வு நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல்வேறு நிலைகளில் 5,318 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை மின்சார வாரியம் ரத்து செய்திருக்கிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1,300 கணக்கீட்டாளர்கள், 600 உதவி பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 2,900 கள உதவியாளர் என மொத்தம் 5,300 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான 4 அறிவிக்கைகள் கடந்த 2020&ஆம் ஆண்டு ஜனவரி 1, பிப்ரவரி 15, மார்ச் 19 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. 18 உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தேர்வுகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. கடைசியாக 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வுகளும் கரோனா பரவல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டன. விரைவில் இத்தேர்வுகள் நடத்தப்படும் என்று விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், இந்தத் தேர்வு அறிவிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆள்தேர்வு அறிவிக்கைகள் ரத்து செய்யப்படுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தேர்வுகள் அனைத்தும் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால், தங்களால் இனி ஆட்களை தேர்வு செய்ய முடியாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்சார வாரியத்தின் இந்த நிலைப்பாடு மிகவும் தவறானது ஆகும்.

மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்கப் பட்டிருப்பது மிகவும் சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். அதற்கான சட்டம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதன்பின் பல நாட்கள் கழித்து தான் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு தான் பொதுத்துறை நிறுவனங்கள் புதிதாக ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிடும் அதிகாரத்தை இழக்கின்றன.

ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் தேர்ந்தெடுக்க உத்தேசித்திருந்த 5,318 பணிகளில் 5,300 பணிகளுக்கான அறிவிக்கைகள் 2020-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளியிடப்பட்டவை. 18 பணிகளுக்கான அறிவிக்கை 2021 பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது ஆகும். அவற்றின்படி 5,318 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்த மின்சார வாரியத்திற்கு எந்த தடையும் கிடையாது.

மின்வாரியப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் மின்வாரியத்தால் நடத்தப் படுவதை விட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுவது நேர்மையானதாகவும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் இருக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இந்த விசயத்தில் செய்யப்படும் காலதாமதத்தால் படித்த இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவராலும் ஈடுகட்ட முடியாது. மின்வாரியத் தேர்வுகள் குறித்த காலத்தில் நடத்தப்பட்டிருந்தால், 5300 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும். ஆனால், போட்டித்தேர்வுகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்படாததால் அதற்காக விண்ணப்பித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்தவிருக்கும் போட்டித் தேர்வு விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது. மின்வாரியத் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துவதாக இருந்தால், அதற்கு குறைந்தது இன்னும் ஓராண்டு ஆகும். அதுவரை மின்வாரியப் பணிகளை எதிர்பார்த்து இருப்பவர்களின் மன உளைச்சல் தொடரும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே விண்ணப்பித்த அனைவரும் டி.என்.பி.எஸ்.சி-யிடம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதிலும் சிக்கல்கள் உள்ளன.

பெரும்பான்மையான மின்வாரியப் பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30, 32, 35 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மின்வாரியம் அறிவித்தப் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மீண்டும் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் அதிகபட்ச வயது வரம்பை கடந்து விடுவார்கள். அதனால், அவர்கள் மின்சார வாரியத்தில் பணியில் சேரும் வாய்ப்பை இழந்து விடுவர். இது சமூக அநீதியாகும்.

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் 5,318 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். அதில் ஏதேனும் தடைகள் இருந்தால், மின்வாரியம் வெளியிட்ட அறிவிக்கைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு, பழைய விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வுகளை மட்டும் டி.என்.பி.எஸ்.சி மூலம் அடுத்த ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிவுகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x