Last Updated : 22 May, 2016 03:33 PM

 

Published : 22 May 2016 03:33 PM
Last Updated : 22 May 2016 03:33 PM

வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம்: மக்களிடம் விழிப்புணர்வு பெறாத புதிய அறிமுகம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் இம்முறை புதிய அறிமுகமாக, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதிசெய்துகொள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அது குறித்த விழிப்புணர்வு வாக்காளர்கள் மத்தியில் இருக்கவில்லை.

தேர்தல் ஆணையம் பிஹார் மாநிலத்தில் பரிட்சார்த்த முறையில் பயன்படுத்திய இந்த இயந்திரங்கள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் 19 தொகுதிகளில் பயன்படுத்தப் பட்டன. திருநெல்வேலி, தூத்துக் குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் இதில் அடக்கம்.

வாக்களித்தபின் இந்த இயந்திரத்திலிருந்து வெளிவரும் ரசீதில், அவர்கள் வாக்களித்த வேட்பாளர் குறித்த விவரத்தை அறியமுடியும். அந்த ரசீதுகளை வாக்காளர்கள் தொடவோ, அல்லது எடுக்கவோ முடியாது. இயந்திரத்திலுள்ள கண்ணாடி திரையில் 7 விநாடிகள் வரை அவை தெரியும். பின்னர் அவை அருகிலுள்ள முத்திரையிடப்பட்ட பெட்டியில் சென்று விழுந்துவிடும்.

வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு பதிலாக, வேறொரு வேட்பாளரின் விபரம் அந்த சிலிப்பில் இருந்தால், அது குறித்து வாக்குச் சாவடி தலைமை அலுவலரிடம் எழுத்து பூர்வமாக புகார் தெரிவிக்கலாம்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்துவார். அதிலும் தவறாக பதிவானால், வாக்குப்பதிவு இயந்திரம் சீலிடப்பட்டு வேறு இயந்திரம் பயன்படுத்தப்படும். ஒருவேளை வாக்காளர் தவறான புகார் அளித்தால், அவர் மீது குற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.

விழிப்புணர்வு இல்லை

ஆனால், இந்த இயந்திரம் தொடர்பான விழிப்புணர்வு திருநெல் வேலி தொகுதி வாக்காளர்கள் பலருக்கு இருக்கவில்லை. கடந்த 16-ம் தேதி தேர்தலின்போது, வாக்களித்துவிட்டு வந்த பலரிடம் இதுகுறித்து கேட்டபோது, இந்த புதிய இயந்திரம் குறித்தே அவர்களுக்கு தெரியவில்லை.

பேட்டை பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய ஆர்.முருகேஸ்வரி, ஜி.பரமேஸ்வரி, பி.கலாவதி ஆகியோர் கூறும்போது, “வாக்குப் பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியதும் பீப் சத்தம் வந்தது, உடனே ஏதோ டோக்கன்போல் வந்தது. சிறிதுநேரத்தில் அது அங்குள்ள பெட்டியில் விழுந்துவிட்டது. அவ்வளவுதான் தெரியும். அதில் உள்ள விவரங்களை கவனிக்கவில்லை. அதுகுறித்து முன்கூட்டியே யாரும் சொல்லவும் இல்லை” என்று தெரிவித்தனர்.

இதே கருத்தைத்தான் பலரும் கூறினர். இந்த புதிய இயந்திரம் பற்றி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்த தேர்தல் ஆணையம், அதே அளவுக்கு வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறிவிட்டது என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x