Published : 04 Jul 2022 02:02 PM
Last Updated : 04 Jul 2022 02:02 PM

“அதிமுக பற்றி பேச தினகரனுக்கு எந்தத் தகுதியும் இல்லை” - கே.பி.முனுசாமி காட்டம்

வேலூர்: "டிடிவி தினகரன் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாதவர். இந்த கட்சியால் பலன் அடைந்தவர், சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். அவரெல்லாம் எங்களைப் பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லாதவர். மாவட்டச் செயலாளர்களுக்கு பணம் கொடுத்து பிடிப்பதாக மீண்டும் கூறினால், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

வேலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "திட்டமிட்டப்படி, வருகிற 11-ம் தேதி, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், பொதுக்குழுக் கூட்டம் உறுதியாக நடைபெறும். அதன்பின்னர், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுதியாக வருவார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். பொதுக்குழுக்கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்று கூறியிருக்கிறார். எனவே, பொதுக்குழு ஆன்லைன் வழியாக இல்லாமல், நேரடியாக நடைபெறும்" என்றார்.

பணம் கொடுத்து மாவட்டச் செயலாளர்களை பிடிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "விரக்தியின் எல்லையில் வைத்திலிங்கம் இருக்கிறார். அதேபோல் டிடிவி தினகரனும் பேசியிருக்கிறார். அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இவர்கள் எல்லாம் அதிமுகவில், தொண்டர்களாக இருந்தவர்கள். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். அதிமுக ஆட்சியிலும் பொறுப்பு வகித்தவர்கள்.

இப்படி வந்த இவர்கள், ஒரு கட்சி தொண்டன் மீது எவ்வளவு பெரிய அபாண்டமான குற்றச்சாட்டை பதிவு செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் வைத்திலிங்கம் கூறும்போது மிகமிக வேதனையாக இருக்கிறது. நேற்றுவரை அவர் இந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அவரோடு நாங்கள் பயணித்தவர்கள். அவ்வாறு பயணித்த எங்களை, இதுபோல குற்றம்சாட்டுவதை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

டிடிவி தினகரன் சேலத்தில் 25 லட்சத்தில் இருந்து 5 கோடி வரை கொடுத்துள்ளதாக பேசியிருக்கிறார். இதுபோல் மீண்டும் ஒருமுறை அவர் கூறினால், நிச்சயமாக நீதிமன்றத்தில் நிற்க கூடிய நிலை அவருக்கு வந்துவிடும். அவர் இந்த கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர். இந்தக் கட்சியால் பலன் அடைந்தவர், சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். அவரெல்லாம் எங்களைப் பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லாதவர். எனவே, இவர் இதுபோன்ற கருத்துகளை மீண்டும் கூறினால், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x