Published : 02 Jul 2022 03:23 PM
Last Updated : 02 Jul 2022 03:23 PM

“அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி கடன் இருப்பினும் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வர் உறுதி” - அமைச்சர்

மதுரை: “தமிழக அரசு ரூ.6 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என எண்ணத்தோடு முதல்வர் இருக்கிறார்” என்று வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.குன்னத்தூர் கிராமத்தில் 317 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வங்கி கடன், கடை ஒதுக்கீடு, செம்பறி ஆடு வழங்குதல், வேளாண்மை உதவி உள்ளிட்ட ரூ.1.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு துறைகளின் கீழான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வணிகவரி மற்றும் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நி்கழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகர், அதிகாரிகள் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறியது: "தமிழக முதல்வரும், நாங்களும் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் பார்ப்பதில்லை. திமுகவிற்கு வாக்களித்தவர்கள், வாக்காளிக்காதவர்கள் என்று நாங்கள் பார்ப்பதில்லை. அரசு மூலம் செய்யக்கூடிய திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நாங்கள் செயல்படுகிறோம். திமுகவை பொறுத்தவரையில் கட்சி என்பதோடு தேர்தலோடு முடிந்தது. தேர்தலுக்கு பிறகு நாங்கள் எங்களை எல்லா தரப்பு மக்களுடைய பிரதிநிதிகளாகவே பார்க்கிறோம்.

ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் காலம்போய் தற்போது மக்களை தேடி சென்று கிராமங்களில் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக நாள்தோறும் பாடுபட்டுவருகிறார். தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருகிறார்.

தமிழ்நாடு அரசு ரூ.6 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தாலும் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என எண்ணத்தோடு முதல்வர் இருக்கிறார். நாட்டிலேயே எளிமையான முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எங்களிடம் உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறீர்களா என கேட்டு திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்பவர் முதல்வர் ஸ்டாலின்" என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x