Published : 02 Jul 2022 04:42 AM
Last Updated : 02 Jul 2022 04:42 AM

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா - பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவு

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா பரவல் கண்டறியப்பட்டது. அதன்பின் அந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. 2021-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கரோனா 2-ம் அலை பரவத் தொடங்கியது. உயிரிழப்பும் அதிகரித்ததால் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, பின்னர் செப்டம்பரில் தளர்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில் 3-ம் அலை வந்தது. ஆனால், அதிக பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. இதனால், கரோனா கட்டுப்பாடுகள் கடந்த 5 மாதங்களாக தளர்த்தப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் கரோனா தினசரி பாதிப்பு 21 என்ற அளவில் குறைந்திருந்தது. மே மாத இறுதியில் இருந்து சிறிது சிறிதாக கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன் மத்தியில் இருந்து பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த மாத இறுதியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், நேற்று முன்தினம் கரோனா ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது. நேற்று மட்டும் தமிழகத்தில் 2,385 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 137 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. வணிக வளாகங்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், கரோனா பரவல் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அவ்வப்போது அறிவுரைகள் வழங்கியபோதும் பொதுமக்களிடம் அலட்சியம் தொடர்கிறது. இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு விரைவாக போட வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கிக் கூறினர். பாதிப்புகளை குறைக்க என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 10 பேருக்கு மேல் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படியும், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தும்படியும் அமைச்சர், அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து தரப்பினரிடமும் இதை கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கரோனா பரவல் அதிகரிக்கும்பட்சத்தில், மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு இல்லாத வகையில், கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x