Published : 11 May 2016 11:49 AM
Last Updated : 11 May 2016 11:49 AM

நீலகிரியில் ஈழவா-தியா சமூகத்தினரின் தேர்தல் புறக்கணிப்பால் பாதிப்பு எந்த கட்சிக்கு?

தமிழகத்தில் மாறி, மாறி ஆண்ட திமுக அதிமுக அரசுகள் தங்கள் ஜாதிச் சான்றிதழ் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை எனக் கூறுகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஈழவா-தியா சமூகத்தினர். இது, எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் படுகர்கள், தாயகம் திரும்பிய தமிழர்கள், ஈழவா-தியா சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் மொத்தமுள்ள 7.5 லட்சம் மக்கள்தொகையில் இவர்கள் சுமார் 50 சதவீதம் உள்ளனர். இதில், ஈழவா-தியா சுமார் 1.5 லட்சம் பேர் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஈழவா-தியா மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களின் பிள்ளைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு சலுகை கிடைப்பதில்லை எனவும் அம் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்வதால், ஜாதிச் சான்றிதழ் பிரச்சினைக்கு ஆளும்கட்சி மற்றும் ஆண்ட கட்சிகள் தீர்வு காணாததால் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஈழவா-தியா நலச் சங்கத்தின் அவசர சிறப்புக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

நீலகிரி மாவட்ட ஈழவா-தியா நலச் சங்கத் தலைவர் ஆர்.சாத்தப்பன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் எங்கள் இனத்தவர் சுமார் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் குமரி, நாகை ஆகிய மாவட்டங்களில் ஈழவா-தியா இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டவர் என ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் நாங்கள் பிற வகுப்பினராக கருதப்படுகிறோம். இதனால் எங்களது குழந்தைகளுக்கு கல்வியில் அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாணவர்களின் உயர் கல்வியில் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. இது தொடர்பாக கடந்த 1992-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். அதிமுக, திமுக என இரு கட்சிகளும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், இது வரை நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் இந்த பிரச்சினை இரு கட்சி தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெறவில்லை.

குன்னூர் வந்த விஜயகாந்த் மற்றும் உதகை வந்த பிரேமலதா ஆகியோர் மட்டும் இந்த பிரச்சினை மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ், ஜாதிச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

பல ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் கேட்டுப் போராடியும், நிறைவேற்றப்படாததால் தேர்தலை புறக்கணிக்க எங்கள் சமுதாய மக்கள் முடிவு செய்துள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி அறவழியில் போராடுவோம் என்றார்.

ஈழவா-தியா சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கேரள வம்சாவளிகள் என்பதால் திமுக சார்பு நிலையில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் அதிமுகவுக்கே வாக்களித்து வருவதுதான் கடந்த காலங்களில் நடந்துள்ளது. எனவே, திமுக வேட்பாளர்கள் இவர்களின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை பெரிதுபடுத்தவில்லை. இவர்கள் புறக்கணிப்பால் பாதிக்கப்படும் அதிமுக வேட்பாளர்களோ இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வாக்குறுதி எதையும் கொடுக்க முடியாத நிலையிலேயே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உலாவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x