Last Updated : 01 Jul, 2022 02:44 PM

 

Published : 01 Jul 2022 02:44 PM
Last Updated : 01 Jul 2022 02:44 PM

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை.

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம் குமாரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: ''தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில் ஏராளமானோர், அப்போது அமலில் இருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. அப்போது நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் இன்னும் பணி கிடைக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 23-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பான வழிமுறைகள் எதுவும் சொல்லப்படவில்லை.

இதனால், மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படலாம். தகுதியற்றவர்கள் பலர் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, “முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது பெரும் ஆபத்தாக அமையும். இது தொடர்பாக அரசு தரப்பில் இன்று விளக்கம் அளிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ''ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நிரந்தரமாக ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது?

முறையற்ற முறையில் நடைபெறும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் தகுதியற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது. இதில் அரசின் விளக்கம் திருப்திகரமாக இல்லை. எனவே, தமிழக அரசின் தற்காலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' என்றார். பின்னர் அடுத்த விசாரணையை ஜூலை 8-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக, அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதன் விவரம் > தொகுப்பூதியம் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் - தற்காலிகமாக நிறுத்திவைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x