Published : 30 Jun 2022 06:35 AM
Last Updated : 30 Jun 2022 06:35 AM

பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு எனக்கு உள்ளது; தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு: ஓபிஎஸ் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதாகவும் புகார்

சென்னை: பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு உள்ளது. ஓபிஎஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்த பழனிசாமி தரப்பும், அதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

இதையொட்டி, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனுவில், “அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்தால், எங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஓபிஎஸ் இந்திய தேர்தல்ஆணையத்தில் கொடுத்த புகார்மனுவில், “அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டுதான், பொதுக்குழு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டங்களை கூட்ட அதிகாரம் உள்ளது.

ஆனால், தற்போது ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. பொதுக்குழுக் கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவைத் தலைவரை தேர்வு செய்யும் தீர்மானத்தை கொண்டுவந்தனர். இதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. யாருடனும் விவாதிக்காமல் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கட்சி விதியின்படி பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே உள்ளது. அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியாது.

சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில்பங்கேற்குமாறு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது, ஒருதலைபட்சமான முடிவு.கூட்டத்தைக் கூட்ட இபிஎஸ்-க்குஎந்த அதிகாரமும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், “அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்என்ற சென்னை உயர் நீதிமன்றஉத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்கக் கோரி 10-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இபிஎஸ் இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள மனுவில், “ஓபிஎஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே வருகிறார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் எனக்கு (இபிஎஸ்)ஆதரவாக உள்ளனர். ஒற்றைத்தலைமை வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்ததால், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x