Last Updated : 04 May, 2016 09:18 AM

 

Published : 04 May 2016 09:18 AM
Last Updated : 04 May 2016 09:18 AM

திருவிழாபோல நடந்த இடைத்தேர்தல்: ஆரவாரம் இல்லாத ஆர்.கே.நகர் தொகுதி - பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர், எம்எல்ஏ பதவிகளை இழந்த ஜெயலலிதா, வழக்கில் இருந்து விடுதலையானதும் கடந்த 2015 ஜூனில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செய லாளர்கள், மாநகர மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவினர் ஆர்.கே.நகரில் முகாமிட்டனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக் கும் ஒரு தேர்தல் பணிமனை திறக்கப்பட்டு அதற்கு அமைச் சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் எங்கு பார்த்தாலும் அதிமுகவினரின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு நாளும் திருவிழா நடப்பது போல அதிமுக வினர் பிரச்சாரம் செய்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் மீண்டும் இத்தொகுதியில் ஜெய லலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சிம்லா முத்துச் சோழன் (திமுக), வி.வசந்திதேவி (விடு தலைச் சிறுத்தைகள் கட்சி), எம்.என்.ராஜா (பாஜக), எஃப். ஆக் னஸ் (பாமக), திருநங்கை ஜி.தேவி (நாம் தமிழர் கட்சி)உட்பட 45 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆனால், இந்தத் தேர்தலில் சென்னையின் மற்ற தொகுதி களைப்போல ஆர்ப்பாட்டம், ஆர வாரம் இல்லாமல் அமைதியாக காட்சி அளிக்கிறது. தண்டையார் பேட்டை திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் 50 மீட்டர் இடை வெளியில் உள்ள அதிமுக, திமுக தேர்தல் பணிமனைகளில் மிகக் குறைவான தொண்டர்களையே காண முடிந்தது.

அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், வட சென்னை மக்களவை உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு, வட சென்னை வடக்கு மாவட்டச் செய லாளர் பி.வெற்றிவேல் ஆகி யோர் அதிமுக தேர்தல் பொறுப் பாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் வெற்றிவேல் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் என்பதால் தனது தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இது தொடர்பாக அதிமுக தேர்தல் பணிமனை யில் இருந்த ஒரு நிர்வாகியிடம் கேட்டபோது, ‘‘ஜெயலலிதா வெற்றி உறுதி என்பதால் அதிமுக வினர் ஆர்வம் காட்டாமல் மந்தமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். கோஷ்டி அரசியல் காரணமாக தனித்தனியாக செயல்படுவதால் தேர்தல் பணிகள் வேகமாக நடக்கவில்லை. ஆனாலும் தேர் தல் நெருங்கிவிட்டதால் இனி கடு மையாக வேலை செய் வார்கள்’’ என்றார்.

திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் திமுக, காங் கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் காலை, மாலை நேரங்களில் பிரச்சாரம் செய்கிறார். முக்கிய நிர்வாகிகள் மற்ற தொகுதிகளுக்கு சென்று விடுவதால் தனித்து விடப்பட்ட நிலையில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

விசிக சார்பில் போட்டியிடும் கல்வியாளர் வசந்தி தேவி தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்கிறார். ஆனாலும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கு சென்று விட்டதால் அவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செ.அரங்க நாயகத்தின் மருமகன் எம்.என்.ராஜா தொகுதியில் பிரச்சாரத் துக்குகூட ஆள் இல்லாமல் அவதிப் பட்டு வருகிறார். பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெயரளவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x