

சென்னை: தமிழகத்தில் 8,193 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமன அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, அறங்காவலர் நியமனத்துக்கு விண்ணப்பிக்க ஆக.20 கடைசி நாள் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களுக்காக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பரம்பரை அல்லாத அறங்காவலர்களைப் பதவி விலகுமாறு இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியது.
இதனை ஏற்று அவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தற்போது காலியாக உள்ள அந்த இடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை அறநிலையத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது 8,193 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமன அறிவிப்பை அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்து சமயஅறநிலையத் துறை சட்டப்பிரிவு 49(1)-ன் கீழ் வரும், பட்டியலில் சாராத 8,193 கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கான தகுதிகள், நிபந்தனைகள் மற்றும் கோயில் விவரங்கள் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ (www.hrce.tn.gov.in) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
தகுதியுள்ள நபர்கள் இணையதளம் வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ விரைவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். ஏற்கெனவே 1,012 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களுக்கான மாவட்டக் குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.