Published : 28 Jun 2022 06:26 AM
Last Updated : 28 Jun 2022 06:26 AM

எதிரிகள் வயிறு எரியவே பூஜையில் பங்கேற்பு: உதயநிதி ஸ்டாலின் கருத்து

கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தங்கமுலாம் பூசப்பட்ட செங்கலை கட்சி நிர்வாகிகளிடம் காட்டுகிறார். உடன், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பிக்கள் செ.ராமலிங்கம், சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏ க.அன்பழகன் உள்ளிட்டோர்.

கும்பகோணம்: எதிரிகள் வயிறு எரியட்டும் என்பதற்காகவே நான் பூஜைகளில் பங்கேற்கிறேன் என கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற திராவிட திருவிழா நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் நகராட்சி திருமண மண்டபம் மூர்த்தி கலையரங்கில் நேற்று திராவிட திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி, 320 பெண்களுக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தையல் இயந்திரங்களை வழங்கிப் பேசியது: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செங்கலை என்னிடம் கொடுத்து, அதற்கு பூஜைகளை செய்தனர்.

பூஜையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால், எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. இதைப் பார்த்து நமது எதிரிகள் வயிறு எரிவார்கள். அதற்காகவே அமைதியாக பூஜைகளில் பங்கேற்கிறேன்.

எனக்கும், செங்கலுக்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் இதுவரை அப்படியேதான் இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை பணிகள் தொடங்கவில்லை என்றார்.

நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யராசு தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு.கல்யாணசுந்தரம் வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி ஆர்.தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், எம்.பி செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், க.அன்பழகன், பூண்டி கே.கலைவாணன், டிகேஜி.நீலமேகம், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், துணை மேயர் சு.ப.தமிழழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை பணிகள் தொடங்கவில்லை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x