Published : 26 Jun 2022 04:10 AM
Last Updated : 26 Jun 2022 04:10 AM

மரம் விழுந்து பெண் உயிரிழப்பு | மழைநீர் வடிகால் பணிகளால் விபத்து ஏற்படவில்லை: சென்னை மேயர் ஆர்.பிரியா விளக்கம்

சென்னை

சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் மரம் விழுந்து பெண் உயிரிழந்த நிலையில், மழைநீர் வடிகால் பணிகளால் அந்த விபத்து ஏற்படவில்லை என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், 136-வதுவார்டுக்கு உட்பட்ட லட்சுமணசாமி சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் 50 ஆண்டு பழமையான, சுமார் 5 அடி விட்டமுள்ள மரம் 24-ம் தேதி மாலை சாய்ந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மரம் விழுந்தது. இதில் காரில் பயணித்த வாணி கபிலன் என்ற பெண் வங்கி அதிகாரி மரணம் அடைந்தார். இதற்கு அப்பகுதியில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிதான் காரணம் என புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ்அதிகாரிகளான துணை ஆணையர் (பணிகள்), மத்திய வட்டார துணை ஆணையர் ஆகியோரை மாநகராட்சி ஆணையர் நியமித்துள்ளார்.

இதனிடையே சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நேற்று நடைபெற்ற குப்பையை வகை பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். அப்போது அவர், இவ்விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மரம் விழுந்த இடத்தில் கடந்த 2 நாட்களாக மண் தோண்டும் பணி மேற்கொள்ளப்படவில்லை. மரம் இருப்பதால் 10 அடிக்கு முன்பாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும், பழமை வாய்ந்தஇம்மரம் சாய்ந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x