அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது: ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது: ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

அக்னி நட்சத்திரம் நாளை (மே 4) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் வெப்பத் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெப்பம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்கிறது. சூரிய ஒளி கூர்மை அடைந்து வெப்பம் அதிகரிக்கும் அந்த குறிப் பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்தரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும்.

முதல் 7 நாட்கள் வெப்பம் ஏறுமுகமாகவும், நடுவில் உள்ள 7 நாட்கள் வெப்பத் தாக்குதல் கடுமையாகவும், மூன்றாவது 7 நாட்கள் வெப்பம் இறங்குமுகமாகவும் இருக்கும். இதனை உணர்வுப்பூர்வமாகவே அறிய முடியும்.

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். தமிழகத்தின் பிற பகுதிகளில் இயல்பைவிட வெப்பம் 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். இருப்பினும், கடந்த பல நாட்களாக இருந்த அளவுக்கு வெப்பத்தாக்குதல் இருக்காது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது.

நேற்று (மே 2) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தருமபுரி, சேலம், வேலூர், திருச்சி விமான நிலையம், கரூர் பரமத்தி, திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் (105.8 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவானது.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சென்னை விமான நிலையத்தில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 96.98 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in