Published : 22 Jun 2022 11:15 AM
Last Updated : 22 Jun 2022 11:15 AM

கட்சித் தொண்டர்கள் அமைதியான முறையில் இருந்து வருகின்றனர்: ஓபிஎஸ்-க்கு வளர்மதி பதில்

சென்னை: "ஒற்றைத் தலைமை வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், சிறப்பான முறையில் இந்த பொதுக்குழு நடக்க வேண்டும் என்று தங்களது ஆர்வத்தை கூறிவிட்டுச் செல்கின்றனர். இது எப்படி அராஜகமான முறையாகும் என்று எனக்கு தெரியவில்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் அழைப்பு விடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்குட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இருவரும் கையெழுத்திட்டு அழைத்துள்ளனர். இவ்வாறு அழைப்பு கொடுத்த பின்னர், எப்படி ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம்கட்ட முடியும். அவரை ஓரங்கட்டுவதாக ஒரு தவறான செய்தி வந்துகொண்டிருக்கிறது. பொதுக்குழுக் கூட்டம் வேண்டாம் என்பதற்கான விளக்கத்தை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதிமுகவில் அராஜகப் போக்கு குறித்த ஓபிஎஸ்-ன் ட்விட்டர் பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அராஜகம்னா, ஊடகங்கள் கிட்டத்தட்ட ஒரு 6,7 நாட்களாக இதே இடத்தில் இருந்து நடப்பதை எல்லாம் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
அராஜகமாக என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அராஜகம் என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம்?

தற்போதுள்ள மோசமான சூழலில் இங்கு வருபவர்கள், தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டு செல்கின்றனர். ஒற்றைத் தலைமை வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், சிறப்பான முறையில் இந்த பொதுக்குழு நடக்க வேண்டும் என்று தங்களது ஆர்வத்தை கூறிவிட்டுச் செல்கின்றனர். இது எப்படி அராஜகமான முறையாகும் என்று எனக்கு தெரியவில்லை. அராஜகம் செய்வது, அடாவடித்தனம் செய்வது என்பது வேறு, இது அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கிறது.

1972-ல், இதுபோன்ற எழுச்சியை என் போன்றவர்கள் எல்லாம் பார்த்து இருக்கிறோம். அதே எழுச்சியோடு கட்சியின் தொண்டர்கள் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய ஒரு எழுச்சியை, உத்வேகத்தை காட்டிக் கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுகவில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கட்சித் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x