Published : 21 Jun 2022 07:22 AM
Last Updated : 21 Jun 2022 07:22 AM

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்; பழனிசாமிக்கு ஆதரவாக திருப்பூரில் தீர்மானம்: பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்

திருப்பூர்: அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வர வேண்டுமென, திருப்பூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம்,கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், 35 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம், பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: கட்சியின் நலன் கருதி இன்னும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்பதற்காக, ஒற்றை தலைமை என்ற முடிவை திருப்பூர் மாநகர்மாவட்ட கழகம் எடுத்துள்ளது.

35 பொதுக்குழு உறுப்பினர்களும் 100 சதவீதம் ஒருமனதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக வர வேண்டுமென, திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டுமென, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். ஆனால்,ஏற்கெனவே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே, பொதுக்குழு நிச்சயம் நடைபெறும்.

எங்களை பொறுத்தவரை யாரையும் ஓரங்கட்டும் எண்ணம் இல்லை. பன்னீர்செல்வமும் எங்களுக்கு சகோதரர்தான். தலைவர் என்ற நிலை வரும்போது, சிறப்பாக செயல்பட பழனிசாமியை தேர்ந்தெடுக்கிறோம் என்றார்.

புதுச்சேரியில்..

இதேபோன்று, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி கிழக்கு மாநில கட்சி நிர்வாகிகளும், முத்தியால்பேட்டை தொகுதி நிர்வாகிகளும் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கிடையே, “கட்சியின் பொதுச்செயலர் எப்போதும் ஜெயலலிதாதான். அப்பதவியில் வேறு யாரையும் ஏற்க மாட்டேன். கட்டாயப்படுத்தினால் அரசியலில் இருந்து விலகுவேன்” என்று புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x