Last Updated : 20 Jun, 2022 05:16 PM

 

Published : 20 Jun 2022 05:16 PM
Last Updated : 20 Jun 2022 05:16 PM

ஒற்றைத் தலைமை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக புதுவை கிழக்கு மாநில அதிமுக தீர்மானம்

புதுச்சேரி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இக்கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட செயலரும் பங்கேற்றார். முத்தியால்பேட்டை அதிமுகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுவை கிழக்கு மாநில அதிமுக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர கழகம் மற்றும் தொகுதி கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று உப்பளம் தலைமை கழகத்தில் நடந்தது. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். காரைக்கால் மாவட்ட செயலாளர் ஓமலிங்கம், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ''கழகத்தின் எதிர்கால நலன் கருதி தற்போதுள்ள கழக ஒருங்கிணைப்பாளர்கள் என்ற இரட்டை தலைமையை மாற்றி, கழகத்திற்கு ஒரே தலைமையாக கழக பொதுச்செயலாளர் பதவியை 23-6-2022 அன்று சென்னையில் நடைபெற உள்ள கழக செயற்குழு, பொதுக் குழு கூட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கழகத்தின் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொள்வது'' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு பிறகு கிழக்கு மாநில செயலர் அன்பழகன் கூறுகையில், "ஒற்றை தலைமையை ஏற்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள். அவர்கள் திமுகவின் பி டீம். பொதுக்குழு கூட்டத்துக்கு நீதிமன்றம் மூலம் யார் தடை உத்தரவு பெற்றாலும் கட்சிக்கு எதிரானவர்கள்'' என்று குறிப்பிட்டார்.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பதவியேற்க வேண்டும் முத்தியால்பேட்டை அதிமுக தீர்மானம்: புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. கிழக்கு மாநில துணை செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ''எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் எண்ணப்படி அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. ஜெயலலிதாவின் வழியில் கழக நிர்வாகிகளை அன்போடும், அரவணைப்போடும் வழிநடத்திச் செல்ல கழகத்தில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்க வேண்டும். தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும். அதற்கு முத்தியால்பேட்டை கழக நிர்வாகிகள் அனைவரும் முழுமனதாக ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளிக்கிறோம்.''

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x