Published : 23 May 2016 05:07 PM
Last Updated : 23 May 2016 05:07 PM

ஈரோட்டுக்கு மீண்டும் சுற்றுச்சூழல் துறை: சாயக் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க முக்கிய நிர்வாகியான கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு பெற்றுள்ள நிலையில், மாவட்டத்தின் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள், 40-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் அரசின் அனுமதி பெற்று இயங்குவதாகக் கூறப்படுகிறது. அனுமதியின்றியும் ஏராளமான ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர், சிறு ஓடைகளில் தொடங்கி, காலிங்கராயன் வாய்க்கால், பாவானி ஆறு, காவிரி ஆறு வரை பாழாக்கி வருகிறது. மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

விதிமுறைகளை மீறி இயங்கும் ஆலைகள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. இதேபோல், சிறிய அளவிலான சாயப்பட்டறைகள் ஆங்காங்கே திடீர், திடீர் என முளைப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. ஓடைகள் போன்ற நீர் நிலைகளின் அருகில் உள்ள காலி இடங்களுக்கு அதிக வாடகை கொடுத்து, எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த திடீர் சாய ஆலைகள் முளைக்கின்றன.

விவசாயிகள் புகார்

உள்ளாட்சித்துறை, மின்வாரி யம், மாசுகட்டுப்பாடு வாரியம் என மூன்று துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தே இந்த தொழில் நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஈரோடு ஆட்சியர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் சாய, சலவை ஆலைகளின் கழிவுநீர் பிரச்சினையே பிரதானமாக எதிரொலித்து வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் பதவி வகித்த நிலையில், இப்பிரச்சினையை தீர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பவானி தொகுதி எம்எல்ஏ கருப்பண்ணனுக்கு இத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க முக்கிய நிர்வாகியான கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ஈரோடு சாய, சலவை கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்பிரச்சினை தவிர ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம் அமைத்தல், பெருந்துறைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருதல், வெளிவட்ட சாலைப்பணிகளை விரைவு படுத்துதல், ஈரோட்டில் அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைத்தல் என்பதுள்ளிட்ட பொதுவான கோரிக்கைகளை தீர்க்கவும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமையுமா?

ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு நீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் என்பது ஏமாற்று வேலை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

அவர்கள் கூறும்போது, ‘சாய ஆலைகள் வெளியிடும் கழிவு நீரை முழுமையாக சுத்திகரிக்க முடியும் என்றால், அதனை அவர்களே மீண்டும் பயன்படுத்தலாமே. அதை ஏன் வெளியில் விட வேண்டும். ஐரோப்பிய நாடுகளால் அபாயம் என கைவிடப்பட்ட சாயமேற்றும் தொழிலை, ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பணத்திற்காக இங்கு சிலர் மேற்கொள்கின்றனர்.

ஈரோட்டில் விளையும் அரிசி, காய்கறிகள், பழம் என அனைத்து உணவுப்பொருட்களும் சாயக்கழிவு கலந்த நீரால் பாதிக்கப்படுகிறது. இதனை சாப்பிடும் அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x