Last Updated : 18 Jun, 2022 01:28 PM

 

Published : 18 Jun 2022 01:28 PM
Last Updated : 18 Jun 2022 01:28 PM

கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சொந்தப் பணத்தை செலவிட்டு கிராமப்புற சிறுவர்களுக்கு இலவச விளையாட்டுப் பயிற்சி

இலவசமாக சாப்ட்பால் பயிற்சி எடுக்கும் சிறுமிகள்.

புதுச்சேரி: கிராமப்புற மாணவர்களுக்கு எம்எல்பி-பேஸ்பால், சாப்ட் பால், டக் ஆப் வார், பவுல்ஸ், போச் போன்ற விளையாட்டுகளை, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சொந்த பணத்தை செலவிட்டு கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இன்றைய சூழலில் சிறுவர்கள், மாணவர்கள் செல்போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களிலேயே பெரும்பாலும் பொழுதை கழிப்பதால் விளையாட்டின் அருமை, பெருமை தெரியாமல் இருக்கிறார்கள். இதனால் பல்வேறு இன்னல்களையும் சந்திக்க நேரிடுகிறது. மனதளவிலும், உடல ளவிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதை மாற்றியமைக்கும் முயற்சியாக கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கிராமப் புறங்களில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு எம்எல்பி-பேஸ்பால், சாப்ட் பால், டக் ஆப் வார், பவுல்ஸ், போச் போன்ற விளையாட்டுகளை தங்களது சொந்தப் பணத்தை செலவிட்டு இலவசமாகவே பயிற்சி அளித்து வருகின்றனர்.

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும்தேசிய, மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க செய்து மெடல்களையும் வாங்கி குவிக்கின்றனர். இவர்களின் இந்த முயற்சி கிராமப்புற குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்து வரும் நந்தகோபால், சுசீந்திரன், பார்த்திபன் ஆகியோர் நம்மிடம் கூறியதாவது:

கிரிக்கெட், ஓட்டம் போன்றவிளையாட்டுகள் பலருக்கும் தெரியும். ஆனால் பேஸ்பால்,சாப்ட்பால் போன்ற விளையாட்டுகளை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவுதான். குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் சிறுவர்கள், மாணவர்கள் பலருக்கும் இது தெரியாது.

இதை கருத்தில் கொண்டு, பிள்ளைகள் அனைத்து விளை யாட்டுகளையும் அறிந்து கொள்வ தோடு, விளையாடி சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் எம்எல்பி-பேஸ்பால், சாப்ட் பால், டக் ஆப் வார், பவுல்ஸ், போச் ஆகிய 5 விளையாட்டுகளை தேர்வு செய்தோம்.

ஆரம்பத்தில் 20 பேர் பயிற்சி பெற்றனர். சற்று காஸ்ட்லியான விளயாட்டு என்பதால் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களால் தேவையான உபகரணங்கள், உடைகள் எதுவும் வாங்க முடியாது. ஆகவே நாங்களே எங்களுடைய சொந்த பணத்தைப் போட்டு, இந்த விளையாட்டுக்குத் தேவையான பந்து, கையுறை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்தோம்.

இந்தப் பயிற்சியை நாங்கள் இலவசமாகவே அளித்து வருகிறோம்.

இப்போது சுமார் 200-க்கும்மேற்பட்ட மாணவர்கள் எங்களிடம்பயிற்சி பெறுகின்றனர். ஆரம்பத் தில் பெற்றோர் தயக்கம் காட்டினர். ஆனால் பிள்ளைகளின் ஆர்வத்தை கண்டு, அவர்களாகவே தானாக முன்வந்து பயிற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக் கும் மேலாக இந்தப் பயிற்சியை நாங்கள் அளிக்கிறோம். மேலும் டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்ரகாண்ட் , ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற தேசிய, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளோம்.

இதில் எங்களது பிள்ளைகள் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், பரிசுகளை வென்றுள்ளர். இது அவர்களின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், கிராமப்புறங்களில் இருக்கின்ற மாணவர்கள் போட்டிகளில் வென்று சாதித்து காட்ட வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.

எனவே, கிராமப்புற சிறுவர்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தேவையான மைதானம், உள்விளையாட்டு அரங்கம் போன்றவற்றை ஏற்படுத்தி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x