Published : 18 Jun 2022 06:04 AM
Last Updated : 18 Jun 2022 06:04 AM

இந்தோ - பசிபிக் பிராந்திய கடற்பரப்பில் கடற்படையின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது: கடற்படை தளபதி சஞ்சய் வாத்சயன் கருத்து

அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 98-வது ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி சஞ்சய் வாத்சயன் பங்கேற்றார். அப்போது, பயிற்சியில் சிறப்பிடம் பிடித்த வம்சி கிருஷ்ணாவுக்கு கேரள ஆளுநரின் சுழற்கோப்பையை அவர் வழங்கினார்.

அரக்கோணம்: இந்தோ-பசிபிக் பிராந்திய கடற்பரப்பில் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வாத்சயன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. இங்குள்ள ஹெலிகாப்டர் விமானி பயிற்சி பள்ளியில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு 98-வது பயிற்சியில் இந்திய கடற்படையை சேர்ந்த 7 வீரர்களுக்கு கடந்த 22 வாரங்களாக ஹெலிகாப்டர் விமானிக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வாத்சயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி வீரர்களின் அணி வகுப்பை பார்வையிட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பயிற்சியை சிறப்பாக முடித்த வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசும்போது, ‘‘ஒரு விமானத்தை இயக்குவதில் உள்ள உற்சாகம் ஈடு இணையற்றது.

எல்லாவற்றிலும் அர்ப்பணிப்பு, தொழில்முறை அர்ப்பணிப்பு கூடுதல் பொறுப்பு களை கொண்டு வரும். ஹெலி காப்டரில் பறப்பது மிகவும் சவாலானது. குறிப்பாக இருண்ட இரவில் ஒரு கப்பலின் சிறிய பகுதியில் கடலுக்கு மேலே பறப்பதற்கு நிபுணத்துவம் உயர்மட்ட திறமை தேவை. மேலும், பாதுகாப்பை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நமது கடற்படை பல ஆண்டு களாக பொறுப்பான நம்பகமான படையாக வளர்ந்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்திய கடற்பரப்பில் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் மனித கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பொருளாதார அதிகார போராட்டம், ஸ்திரத்தன்மை மற்றும் ஊடுறுவல் போன்றவை கடல்சார் கண்காணிப்பில் அச்சுறுத் தும் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.

இந்திய கடற்படையில் குறிப்பாக கடற்படை விமான போக்குவரத்து எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக இருக்கிறது. இந்தாண்டு அமெரிக்கா, ரஷ்யா,இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேஷியா, ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட கடல் பரப்பு நட்பு நாடுகளுடன் முழு வீச்சில் கூட்டு பயிற்சியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இந்தாண்டு ஆகஸ்ட் இறுதிக்குள் ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட கே.வி.26 வகை ஹெலிகாப்டர் வருகை எதிர் பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்குள் 10 கே.வி.26 வகை ஹெலிகாப்டர்கள் கடற்படையில் இணைக்கப்படவுள்ளன. இங்கு பயிற்சி பெற்ற விமானிகளை வாழ்த்துகிறேன். உங்களின் புதிய பணியிட நியமனங்களில் மகிழ்ச்சியுடன் ஹெலிகாப்டர்களை தரையிறக்கவும் வாழ்த்துகிறேன்’’ என்றார்.

முன்னதாக, பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வம்சி கிருஷ்ணாவுக்கு கிழக்கு பிராந்தி கடற்படை தளபதியின் சுழற்கோப்பை, கேரள ஆளுநரின் சுழற்கோப்பையுடன் சப் லெப்டி னென்ட் குன்டே நினைவு புத்தகம் பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x