Published : 17 Jun 2022 07:39 AM
Last Updated : 17 Jun 2022 07:39 AM

சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை வழக்கு: ஆந்திரா, கேரள மருத்துவர்களிடம் மருத்துவக் குழுவினர் விசாரணை

ஈரோடு: ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்தது தொடர்பாக, ஆந்திரா மற்றும் கேரளாவைச்சேர்ந்த மருத்துவமனை மருத்துவர்கள், தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவக்குழு முன்பு நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டைகள், போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார், இடைத்தரகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியிடம் போலீஸார் நடத்தியவிசாரணையில் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஒசூர், ஆந்திரா மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம்திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு, பெருந்துறை மருத்துவமனைகளின் அலுவலர்கள், மருத்துவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழகஅரசின் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான உயர்மட்ட மருத்துவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஈரோடு, பெருந்துறை, சேலம் மற்றும் ஒசூரில் உள்ள மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் அடுத்த கட்டமாக, இக்குழுவினர் நேற்று மீண்டும் ஈரோடு வந்தனர். கருமுட்டை விற்பனை சம்பவத்தில் தொடர்புடைய திருப்பதி மற்றும் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு இக்குழுவினர்சம்மன் அனுப்பி இருந்ததால், அவர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், இக்குழுவின் முன்புநேற்று ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது ஏடிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையிலான காவல்துறையினரும் மருத்துவமனை அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கருமுட்டை விற்பனை செய்வதற்காக சிறுமியை எப்போது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர், அவரது வயது குறித்துஅறிய எத்தகைய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது, சிறுமியுடன் வந்தவர்கள் யார், அவருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது, எத்தனை முறை சிறுமி கருமுட்டை தானம் செய்துள்ளார் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் கைதாகியுள்ள இடைத்தரகர் மாலதியை 5 நாட்கள் காவலில்எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனு செய்தனர். இதனை விசாரித்த ஈரோடு நீதிமன்றம், மாலதியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இடைத்தரகர் மாலதியிடம் மீண்டும் விசாரணைநடத்தும்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களின் உண்மைத்தன்மை வெளிப்படுவதோடு, வழக்கு விசாரணைக்கு உதவியாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x