Published : 16 Jun 2022 08:16 AM
Last Updated : 16 Jun 2022 08:16 AM

திருச்சி | தமிழ் பிராமி எழுத்துகளில் 1,330 குறட்பாக்களை கையால் எழுதி வெளியிட்ட தமிழாசிரியர்: பல்வேறு தமிழ் அமைப்பினர் பாராட்டு

திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் ஒருவர் தமிழ் பிராமி எழுத்துகளில் 1330 குறட்பாக்களை கையால் எழுதி அச்சிட்டு அதை நூலாக வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவ.சற்குணன். தற்போது திருச்சியில் வசித்து வரும்இவர், தமிழில் முனைவர் பட்டம்,திருக்குறள் புலமையர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம், சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றுள்ளார்.

பட்டதாரி ஆசிரியர், முதுநிலைதமிழாசிரியர் மற்றும் தலைமையாசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது திருச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் புதுக்கவிதை, பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமின்றி, யாப்பியல் படைப்பில் குமாரவயலூர் திருச்சதகவந்தாதி, வயலூர் மறப்பிலிநாதன் போற்றித் திருத்தாண்டகம், வயலூரான் கலிவெண்பா, சிவனுறை பதிகள் 108, திருச்செந்தூர் திருச்சதகவந்தாதி உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார்.

கல்வெட்டியலில் தனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக தமிழ் பிராமிஎழுத்துகளை கற்று, அதை சிறு சிறு வாக்கியங்களில் எழுதி வந்துள்ளார். இதில் முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பிய சைவ.சற்குணன், ‘ஆதித்தமிழை அறிவாய் தமிழா’ என்ற நூலை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் என்ன சிறப்பு எனில் கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்து 2-ம்நூற்றாண்டு வரை உள்ள காலக்கட்டங்களில் தமிழில் எத்தகையஎழுத்துருவைப் பயன்படுத்தினார்களோ, அதே தமிழ் பிராமி எழுத்துருக்களைப் பயன்படுத்தி திருக்குறளின் 1,330 குறள்களை எழுதியுள்ளார். இவரை பல்வேறு தமிழ்அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சைவ.சற்குணன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தமிழ் பிராமி எழுத்துகளில் திருக்குறள் அனைத்தையும் எழுதி, அதை நூலாக வெளியிட்டுள்ளேன். தொடர் பணிகளுக்கிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி 5 மாதங்களில் இந்த நூலை முடித்தேன். இது 260 பக்கங்களில் தற்போது வெளிவந்துள்ளது.

இதை யார் வேண்டுமானாலும் எளிதாக படிக்கலாம். இதற்கு வசதியாக நூலிலேயே அட்டவணையும் கொடுத்துள்ளேன்.

தமிழ் பிராமி எழுத்துகளில் வெளியிட காரணம் நமது முன்னோர்கள் முற்காலத்திலேயே எவ்வளவுவலிமையான எழுத்து வடிவத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. இதை இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அனைவரும் அறிந்த திருக்குறளை தமிழ் பிராமிஎழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளேன்.

ஒரு மொழி சைகையிலிருந்து, ஒலி வடிவத்துக்கு வந்து, அது எழுத்தாகி, வார்த்தையாகி, வரி வடிவத்துக்கு வளமையான இலக்கணத்துடன் வர வேண்டும் என்றால்அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள்ஆகும் என்கின்றனர் மொழியியல்வல்லுநர்கள்.

நமது தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலையை எட்டி விட்டது என்றால் நமது ஆளுமை தான் மிகச்சிறப்பான விஷயமாக உள்ளது. இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பது தான் இந்த நூலின் நோக்கம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x