Last Updated : 25 May, 2016 03:00 PM

 

Published : 25 May 2016 03:00 PM
Last Updated : 25 May 2016 03:00 PM

நெல்லை எம்.எல்.ஏ.க்கள் எதிர்கொள்ளும் சவால்கள்: வளர்ச்சித் திட்டங்களுக்காக தொகுதிகள் காத்திருப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏற்கெனவே நிலுவையிலுள்ள பல்வேறு திட்டங்களையும் புதிய திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருநெல்வேலிக்குள் நுழையும் போதுதான் தாமிரபரணி பெருமளவில் மாசடைகிறது. அதோடு, ஆற்றுத்தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. மாநகராட்சி சார்பில் ராமையன்பட்டி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். திருநெல்வேலி பேட்டையில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இப்பிரச்சினைகளுக்கு தற்போதைய புதிய எம்.எல்.ஏ. தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்.

அம்பாசமுத்திரம்

இத்தொகுதியிலுள்ள காருக்குறிச்சி மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. மண் எடுப்பதற்கு அதிகாரிகள் காட்டும் கெடுபிடியால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை திட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம், மணிமுத்தாறு அணை பூங்கா சீரமைப்பு திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

ஆலங்குளம்

அரிசி ஆலைகள், காய்கறி சந்தை என்று ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இருந்தாலும் உரிய முன்னேற்றம் இல்லை. இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, வெண்டை ஆகியவை கேரளத்துக்கு தினமும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், சமீபத்தில் விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக காற்றாலைகள் ஆங்காங்கே பெருகிவருகின்றன.

ராதாபுரம்

ராதாபுரம் தொகுதியில் தாதுமணல் பிரச்சினை, கடல் அரிப்பு, கடலுக்குள் விசைப்படகு மீனவர்களால் ஏற்படும் தொல்லைகள் என்று பல்வேறு இன்னல்களை மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். ராதாபுரம் தொகுதியில் 51 குளங்களுக்கு தண்ணீர் வருவதற்காகவே உயர்த்தி கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணை தண்ணீரை இன்றுவரை ராதாபுரம் கால்வாயில் கொண்டுவருவதற்கு அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. காவல்கிணறு சந்திப்பில் தொடங்கப்பட்ட மலர் வணிக வளாகம் முடங்கிப் போயிருக்கிறது.

நாங்குநேரி

நாங்குநேரி பொருளாதார சிறப்பு மண்டலம் திட்டம் முடங்கியிருக்கிறது. பல இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக மும்பை, சென்னை, கோவைக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையாக அமைந்துள்ளதால் ஊருக்குள் பேருந்துகள் வர மறுக்கின்றன. வாழைத்தார்களை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் தொகுதி முழுக்க வானம்பார்த்த பூமியாக இருக்கிறது. விவசாயம் அருகி வருகிறது. சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினை, புதிய பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவராதது, சுகாதாரச் சீர்கேடு பிரச்சினைகள் ஆகியவற்றால் மக்கள் சிரமப்படுகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்வெட்டாலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள ரக கட்டுப்பாடு சட்டத்தாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாசுதேவநல்லூர்

பிரசித்திபெற்ற புளியங்குடி எலுமிச்சை சந்தைப் பகுதியில் எலுமிச்சையை பதப்படுத்தும் குளிர்பதன கிட்டங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பு மற்றும் வசதிகள், வறட்சி காலங்களில் பாதிக்கப்படும் எலுமிச்சை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள எல்லையில் சேதமடைந்துள்ள செண்பகவல்லி அணையை சீர்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.

கடையநல்லூர்

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கருப்பாநதியிலிருந்து தண்ணீர் கொண்டுவரும் கூட்டு குடிநீர் திட்டம் தற்போதுவரை முழுமை அடையவில்லை. கடையநல்லூர் தாலுகா அலுவலகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆகியவற்றுக்கு சொந்த கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. வடகரை, செங்கோட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதைத் தடுக்க வேண்டும்.

தென்காசி

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இத் தொகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்கான உருப்படியான திட்டங்கள் பல ஆண்டுகளாகவே செயல்படுத்தப்படவில்லை. ஆண்டுதோறும் சீசன் காலத்தில் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள்கூட செய்துதரப்படவில்லை. குற்றாலத்தில் இயற்கையை காவுவாங்கும் வகையில் பல கட்டுமானங்கள் உருவாகிவருகின்றன. இத் தொகுதியில் தென்னை விவசாயத்தை அழிக்கும் வகையில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுவது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த 10 தொகுதிகளிலும் இருக்கும் குறைபாடுகளை தீர்க்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும் புதிய எம்.எல்.ஏக்கள் வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மாவட்ட மக்கள் காத்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி பேட்டையில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை மூடப்பட்டதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x