Published : 14 Jun 2022 01:09 PM
Last Updated : 14 Jun 2022 01:09 PM

டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: தொழில்நுட்ப மையங்களாக மாறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் - பலன்கள் என்னென்ன?

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

2021-22ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கையில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் பயிற்சியாளர்கள், தொழில் நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பு பெறும் வகையில், பயிற்சியின் தரம் உயர்த்திட, அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் புனரமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவப்பட்டு எதிர்காலத் தேவையினை பூர்த்தி செய்திட புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், பயிற்றுநர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி வழங்கிட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தி அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கும், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

தற்போது 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன.

இதன்மூலம் ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுஃபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு வெல்டிங் போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x