Published : 13 Jun 2022 07:14 AM
Last Updated : 13 Jun 2022 07:14 AM

புதுச்சேரி | பேருந்து இருக்கையில் அமர்ந்த பெண்ணை எழச்செய்த ஏஎஸ்ஐ: வீடியோ வைரல்

புதுச்சேரி: அரசு பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஏஎஸ்ஐ ஒருவர் எழச் செய்த வீடியோ வைரலாகி உள்ளது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக பேருந்து ஒன்று சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தது. குளிர்சாதன வசதியுடைய அந்த பேருந்தில் அனைவரும் இடம் பிடித்து அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஏஎஸ்ஐ ஒருவர், இருவர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை அங்கிருந்து எழுந்திருக்குமாறு கூறினார். ஆனால் அவர் முன்பதிவு இல்லாத பேருந்தில் ஏன் எழ வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தான் அந்த இருக்கையில் இடம் பிடித்து வைத்திருப்பதாக ஏஎஸ்ஐ கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் பெண் அதுபோல் யாரும் இருக்கையில் இடம் பிடிக்கவில்லை என்றார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை இருக்கையில் இருந்து எழச் செய்தார் ஏஎஸ்ஐ. இதனை பேருந்தில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் படம் எடுத்தார். அதைப் பார்த்த ஏஎஸ்ஐ செல்போனை பறிக்க முயன்றார்.

ஆனால் அந்த இளைஞர் செல்போனை கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து ஜீப்பை வரவழைத்து, செல்போனில் படம் எடுத்த இளைஞர், பேருந்தில் இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்த பெண், அவரது கணவர் ஆகிய மூவரையும் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்.

அப்போது வீடியோ எடுத்தவர் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் என்பது தெரிய வந்தது. தகவலறிந்து அவரது நண்பர்கள் காவல் நிலையம் சென்றனர். காவல் நிலைய ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்து அவர்களை காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் தரப்பில் கேட்டபோது, ‘‘பேருந்தில் இடம் பிடிப்பது, படம் எடுத்தது சம்பந்தமாக ஏஎஸ்ஐ, பெண், இளைஞர் ஆகிய 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் வரவழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துவிட்டோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x