Published : 13 Jun 2022 12:29 PM
Last Updated : 13 Jun 2022 12:29 PM

'அனைவருக்கும் கல்வி; அனைவருக்கும் உயர் கல்வி' | திராவிட மாடல் அரசின் லட்சியம்: முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி என்பதே இந்த திராவிட மாடல் அரசினுடைய லட்சியமாக, கடமையாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்திற்காகத்தான் திராவிட இயக்கமே உருவாகியிருக்கிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமான சமூகநீதி என்பது கல்வித் தேவைக்காக உருவாக்கப்பட்டதுதான்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "நீர் எப்படி தாகத்தைப் போக்குகிறதோ, அதைப்போல கல்வியின் தாகத்தை, அந்த அறிவு தாகத்தை போக்கக்கூடிய வகையிலே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கல்விக்கு மிகமிக முக்கியத்துவத்தைக் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. குறிப்பாக கரோனா வந்த சமயத்தில், ஊரடங்கு பிறப்பித்த நேரத்தில், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடு செய்வதற்கும், எதிர்காலத்துக்கு ஏற்ற சிந்தனைத் திறனை கல்வியின் மூலம் மாணவர்கள் பெறுவதற்கும், பல்வேறு முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த அடிப்பைடையில், எண்ணும் எழுத்தும் என்கிற இந்த இயக்கத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். கரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் ஒன்றரை ஆண்டு காலமாக மூடப்பட்டிருந்தது. இதனால், வகுப்பறையில் நேரடியாக குழந்தைகள் கல்வி கற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கற்றலில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. அதனை குறைக்கவும், குழந்தைகளின் கற்றல் ஆற்றலை அதிகப்படுத்தவும், எண்ணும் எழுத்தும் என்ற இந்த முன்னோடித் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான படிப்புகள் மட்டும் போதாது. புதிய உத்தி தேவை என்பதை அரசு உணர்ந்ததன் அடிப்படையில்தான், இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தனது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு உயர்மட்டக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும், கல்வியாளர்களும் இருப்பார்கள்.

தமிழ், ஆங்கிலம், கணக்கு என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தேசிய, மற்றும் மாவட்ட அளவில், ஆலோசனை நடத்தி இத்திட்டத்தை சீர்செய்து செழுமைப்படுத்துவார்கள். இதுதொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் 92 ஆயிரத்து 386 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பங்கெடுத்தனர். இவர்கள் சொன்ன கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தொடக்கப் பருவத்தில் கல்வியை தரவேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு, அதனைத்தாண்டி அரசுக்கும் உண்டு. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி என்பதை இந்த திராவிட மாடல் அரசினுடைய லட்சியமாக, கடமையாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்திற்காகத்தான் திராவிட இயக்கமே உருவாகியிருக்கிறது. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமான சமூகநீதி என்பது கல்வித் தேவைக்காக உருவாக்கப்பட்டதுதான். நீதிக்கட்சி காலம்தொட்டு, இன்றுவரை கல்விக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாக, திராவிட இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தொடக்கக் கல்வியை வெறும் கல்வியாக மட்டும் பார்க்க முடியாது. அது வாழ்க்கையினுடைய வழிகாட்டியாக, தன்னம்பிக்கையின் தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. இந்த சமூகத்தின் திறவுகோலாக ஒவ்வொரு மனிதருக்கு இருப்பது இந்த தொடக்கக் கல்வி. ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக்கல்வி ஒழுங்காக முறையாக கிடைத்துவிட்டால், அதன்பிறகு நடக்கும் அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதனால்தான் திராவிட மாடல் அரசு, எண்ணும் எழுத்தும் என்ற இந்த இயக்கத்தை தொடங்கியிருக்கிறது.

2025-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் இருக்கின்ற 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும், பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது என்பதும், எண்ணறிவு பெற்றவர்களாக திகழ வேண்டும் என்பதும் அரசின் இலக்கு. 2022-ம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x