Published : 12 Jun 2022 04:25 AM
Last Updated : 12 Jun 2022 04:25 AM

கரோனா பாதிப்பு | அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை - இன்று ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள்.

புதுடெல்லி/சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் கரோனா தாக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடை பெற்றது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 108 நாட்களுக்குப் பிறகு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,32,13,435-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,757-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரே நாளில் 4,103 அதிகரித்து, 40,370-ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 194.92 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு காணப்படுகிறது. நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 219 பேர் புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாகினர்.

இது முந்தைய மாதங்களைவிட அதிகம் என்பதால், கரோனா தாக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான வசதிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரைப் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, பாதிப்பு இருந்தால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை 93.82 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 82.94 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப் பூசியும் போடப்பட்டுள்ளது. எனினும், தமிழ்நாட்டில் 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 கோடியே 20 லட்சம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும் இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி செ.சைலேந்திர பாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 12) ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறஉள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரி வித்துள்ளார்.

217 பேர் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 110, பெண்கள் 107 என மொத் தம் 217 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,133-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 145 பேர் குணமடைந்தனர். நேற்று உயிரிழப்பு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x