Published : 12 Jun 2022 04:00 AM
Last Updated : 12 Jun 2022 04:00 AM

என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் ஆஜராக நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை

என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமைச் செயலர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் வரும் ஜூன் 23-ம் தேதி நேரில் ஆஜராக நேரிடும் என தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தை ஒட்டியுள்ள என்எஸ்சி போஸ் சாலையில் பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத அளவுக்கு கடைகளை விரித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கோரி (மறைந்த) சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டுஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதிகாரிகள் நடைபாதை கடை வியாபாரிகளை அப்புறப்படுத்தவில்லை எனக் கூறி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, நடைபாதை கடைகளை அப்புறப்படுத்திய சில மணி நேரங்களில் மீண்டும் நடைபாதை கடைகள் அமைக்கப்படுகின்றன. எனவே இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் திட்டம் உருவாக்க வேண்டுமென கடந்த 2016-ம்ஆண்டு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த நீதிமன்றஅவமதிப்பு வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதிகள், “என்எஸ்சி போஸ்சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை வேறு இடத்துக்கு மாற்ற பலமுறை அவகாசம் வழங்கியும் அதிகாரிகள் இதுவரையிலும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்த ஒன்றுதான்.

எனவே வரும் ஜூன் 23-ம் தேதிக்குள் என்எஸ்சி போஸ்சாலையில் உள்ள நடைபாதைகடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ளஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், முன்னாள் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், தற்போதைய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராக நேரிடும்” என எச்சரித்து விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x