

ஜி.கே மூப்பனாரால் தொடங்கப்பட்ட தமாகா எழுச்சியையும், ஜி.கே.வாசனால் தொடங்கப்பட்ட தமாகா வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.
1996 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர முடிவு செய்தபோது, தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மூப்பனார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் தலைவராக இருந்த நரசிம்ம ராவ் அதிமுக கூட்டணியில் உறுதியாக இருந்தார். இதன் காரணத்தால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கினார். ப.சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமாகாவில் இணைந்தனர்.
அப்போது, திமுக கூட்டணியில் தமாகா 40 இடங்களில் போட்டியிட்டது. 1996 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே தமாகா தோல்வியை தழுவியது. இதே போல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா அதிமுக அணியில் 32 இடங்களில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2001-ல் ஜி.கே.மூப்பனார் மறைவுக்குப் பிறகு தமாகாவை மீண்டும் காங்கிரஸ் கட்சியோடு ஜி.கே.வாசன் இணைத்தார்.
இந்நிலையில் 10 ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, தமாகாவை ஜி.கே.வாசன் மீண்டும் கடந்த 2014 நவம்பரில் தொடங்கினார். அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைக்க உள்ளது என்று சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக தரப்புடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இல்லாத காரணத்தால், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. அந்த அணியில் தமாகா 26 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தமாகாவின் டெபாசிட் பறிபோயுள்ளது.
மூப்பனார் காலத்தில் வெற்றி பெற்ற தமாகாவால், ஜி.கே.வாசன் காலத்தில் சாதிக்க முடியாமல் போனது அக்கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில், திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மூப்பனார் தமாகாவை தொடங்கியபோது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும், தமாகாவுக்கு வந்தனர். ஆனால், ஜி.கே.வாசன் தமாகாவை தொடங்கியபோது, காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் தமாகாவுக்கு வரவில்லை. வாசனோடு வந்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் தமாகாவில் பிடிப்பில்லாமல் இருந்தனர். சிலர் கடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு சென்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக தமாகா வலுவான கூட்டணியை அமைக்க தவறியதும் தோல்விக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.