Last Updated : 07 Jun, 2022 11:47 AM

 

Published : 07 Jun 2022 11:47 AM
Last Updated : 07 Jun 2022 11:47 AM

புதுக்கோட்டை | தொடர் மழையால் சேறும் சகதியுமாக மாறிய முதல்வரின் விழா அரங்கம்

புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தேங்கிய சகதியை வழித்து அகற்றும் பணியில் பணியாளர்கள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தொடர் மழையின் காரணமாக நாளை நடைபெற உள்ள தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரங்கம் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. வழித்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை காட்டுபுதுக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஜூன் 8) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில், ரூ.614 கோடியில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தேங்கிய தண்ணீர்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதுக்கோட்டைக்கு முதன்முறையாக அரசு விழாவில் கலந்துகொள்வதற்கு தமிழக முதல்வர் வரவுள்ளதால் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் 6 மில்லி மீட்டரும், நேற்று இரவு 39 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவானது.

அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நகரின் பிற பகுதிகளை விட விழா நடைபெற உள்ள இடமானது தாழ்வாக இருப்பதாலும் பிற பகுதிகளிலிருந்தும் மழைநீர் பெருக்கெடுத்து இப்பகுதியை நோக்கி வந்து தேங்கியுள்ளது. மேலும், சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், முன்னேற்பாடு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதோடு, சேறும் சகதியையும் பணியாளர்களைக் கொண்டு வழித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ வை.முத்துராஜா, ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரங்கத்தை பார்வையிடும் மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர்.

பொதுவாக மழை காலங்களில் பெருமளவு தண்ணீர் தேங்கி வாரக்கணக்கில் குளம் போல் காட்சி அளிக்கக்கூடிய பகுதியாகவே மாவட்ட விளையாட்டு மைதானம் இருந்து வந்துள்ளது. இதனால், தொடர்ந்து மழை பெய்தால் விழா நடத்துவதற்கு மிகவும் இடையூறாக இருக்கும். ஆகையால், மழை தொடர்ந்தால் நிகழ்ச்சி ரத்தாகும் சூழலும் ஏற்படலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை காட்டுப்புதுக்குளம் பகுதியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தேங்கிய சகதியை வழித்து அகற்றும் பணியில் பணியாளர்கள்.

விழா நடைபெறும் இடத்தை இதுபோன்ற தாழ்வான பகுதியை தேர்வு செய்வதைவிட, மன்னர் அரசு கல்லூரி மைதானம் போன்ற மேடான பகுதியை தேர்வு செய்திருக்கலாம் என்பது பொதுமக்களின் கருத்தாகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x