Published : 05 Jun 2022 04:40 AM
Last Updated : 05 Jun 2022 04:40 AM

சென்னை ஐஐடி உதவிப்பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு

சென்னை: சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வில், இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 23 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். அவற்றில் 6,511 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையே, ஐஐடி-களில் சுமார் 40 சதவீதம் (4,370) ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

மேலும், ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் நிலவின. இதையடுத்து, ஐஐடி-களில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை, இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்புவதற்காக ‘மிஷன் மோடு’ என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் செயல்படுத்தியது.

அதன்படி, 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்னை ஐஐடி கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவுக்கு (இ.டபிள்யு.எஸ்) 5 இடங்கள், ஒபிசி-க்கு 25, எஸ்சி/ எஸ்டி பிரிவுக்கு 19 என்ற விகிதத்தில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்தப் பணிக்கு 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தகுதியானவர்களுக்கான நேர்காணல் கடந்த மே மாதம் கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடத்தப்பட்டது. தேர்ச்சி முடிவுகளை ஐஐடி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் 49 பணியிடங்களுக்கு, 23 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், இ.டபிள்யு.எஸ். பிரிவுக்கு 10 சதவீதம், ஓபிசிக்கு 27, எஸ்.சி.க்கு 16.6, எஸ்.டி. பிரிவுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் மொத்த பணியிடங்களில் 59.5 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 12 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.

சென்னை ஐஐடி-யில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணியிடங்களில் 599 (88%) பணியிடங்கள் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஓபிசிக்கு 66 இடங்கள், எஸ்.சி./ எஸ்.டி. பிரிவுக்கு 19 இடங்கள் மட்டுமே உள்ளன.

குளறுபடிகள்

தற்போது உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்விலும் குளறுபடிகள் அரங்கேறியுள்ளன. மொத்தமுள்ள 49 பணியிடங்களுக்கு 23 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 53 சதவீத (26) இடங்கள் நிரப்பப்படவில்லை.

அந்த இடங்களுக்கு ‘யாரும் தகுதி பெறவில்லை’ என்று ஐஐடி காரணம் தெரிவித்துள்ளது. அவை அனைத்தும் ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி.பிரிவு பணியிடங்களாகும்.

இனி மீதமுள்ள ஓபிசி பணியிடங்களை பொதுப் பிரிவுக்கு மாற்றி, அதை நிரப்பும் முயற்சியில் ஐஐடி ஈடுபடும். இது அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடாகும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x