Published : 04 Jun 2022 11:42 AM
Last Updated : 04 Jun 2022 11:42 AM

சென்னையில் 2 மண்டலங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய இரண்டு மாநகராட்சி மண்டலங்களில் கரோனா பாதிப்பு வேகம் அதிகமாக உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தி.நகர் கிரி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரோனா தொற்று இந்தியா முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் சுகாதரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை மிகுந்த கவனத்துடன் இருக்க முதல்வர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிரிழப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.

அண்ணா பல்கலை, சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஆனால் 4 கல்லூரிகளிலும், மாணவர்கள் மாஸ்க் அணிவது, உணவருந்தும் போது தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் தொற்று பாதிப்பு இந்த கல்லூரிகளில் வெகுவாக குறைந்து வருகிறது. சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விஐடியில் 196 பேருக்கு தொற்று உறுதி சசெய்யப்பட்டதில், 3 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 193 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது.

‘சென்னையில் மொத்தம் 370 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளனர். சென்னையிலும் ஒரு சில இடத்தில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தி.நகரில் ஒரு குடும்பத்தில் 6 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் 6 பேரும் நலமுடன் இருக்கிறார்கள்.

பாதிப்பின் வேகம் சற்று அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு போன்ற நிலை இல்லாததால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. தொற்று பாதிப்பு எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் சுகாதரத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x