Published : 23 May 2016 11:05 AM
Last Updated : 23 May 2016 11:05 AM

மேட்டூர் அணையில் இந்த ஆண்டும் போதிய நீர் இருப்பு இல்லை: காவிரி டெல்டாவில் கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி முழு அளவில் மேற்கொள்ள இயலாத நிலைதான் ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.

காவிரி டெல்டாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் என ஏறத்தாழ 1 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி வழக்கமாக மேற்கொள்ளப்படும். இதற்கென வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

குறுவை சாகுபடி என்பது குறுகிய காலத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாய முறையாகும். இந்தப் பருவத்தில் குறைந்த காலத்தில் பயிராகும் நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேட்டூர் அணையில் மே 21-ம் தேதி நிலவரப்படி 47.30 அடி தண்ணீரே இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 72 அடி தண்ணீர் இருந்தபோதிலும் ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படவில்லை.

காவிரியில் இருந்து தண்ணீர் பெறும் கர்நாடகத்தின் 4 அணை களில் ஜனவரி மாதத்தில் ஏறத்தாழ 39.69 டிஎம்சி தண்ணீர் இருந்தது. இந்தத் தண்ணீரை கர்நாடகம் கோடை பயிர் சாகு படிக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தியது போக, தற்போது 18.92 டிஎம்சி தண்ணீரே இருப்பு உள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி செய்யும் நிலப்பரப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கர்நாடக அணைகள் மற்றும் மேட்டூர் அணை ஆகியவற்றில் போதுமான தண்ணீர் இல்லாத தால், இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு அளவில் செய்ய முடியாது. டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 1 லட்சம் மோட்டார் பம்ப் செட்கள்உள்ளன. இவற்றைக் கொண்டுதான் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டில் குறுவை சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.40 கோடியில் தமிழக அரசு சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இதில் வழங்கப் பட்ட இடுபொருட்கள் பலவும் தரமற்றவையாக இருந்ததால், விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் முழுப் பயன் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்காக செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் அனைத்தையும் விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து ஆலோசித்து, நிறை வேற்ற வேண்டும்.

மேலும், கர்நாடகா தனது அணைகளில் உள்ள தண்ணீரை தொடர்ந்து கோடை சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. இது தொடர்பாக மத்திய அரசிடமும் உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு உரிய முறையில் முறையீடு செய்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் பங்கீட்டு ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

தென்மேற்கு பருவமழை ஜூன் 2-வது வாரத்தில்தான் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், கர்நாடகாவில் அணைகள் நிரம்பிய பின்னர்தான் நமக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதால், தமிழக அரசு விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.2,700 என வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x