Published : 02 Jun 2022 04:34 AM
Last Updated : 02 Jun 2022 04:34 AM

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு - தனிமனித இடைவெளியை கடைபிடிக்க சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றின் 4-வது அலை ஜூன் மாதம் தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கெனவே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21 வரை குறைந்திருந்தது. தற்போது 100-ஐ கடந்துள்ளது. நேற்று புதிதாக 139 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் குழுகுழுவாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளதை போல் தொற்றின் 4-வது அலை தொடங்கியுள்ளதா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் உள்ளது. தற்போது அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பாதிப்பு கண்டறியப்படுவதால், தொற்று அதிகரித்துள்ளது. டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது என்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அதனால் மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்.

மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்களை வீடுகளில் இருக்கச் சொல்லவோ, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவோ கூடாது. இந்த தொற்றை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும்.

தொற்று பாதித்த மாணவர்களின் மாதிரிகள், மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் பரிசோதனை முடிவுகள் வந்துவிடும். இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையில் அனைவருக்கும் பிஏ2 வகை கரோனா வைரஸ் பாதிப்பு என்பது உறுதியாகியுள்ளது. ஒருவருக்கு மட்டும் பிஏ3 வகை கரோனா வைரஸ் இருந்தது. அவரும் குணமடைந்துவிட்டார்.

பாதிப்பு லேசாக இருந்தாலும், தொற்று வேகமாகப் பரவுகிறது. அதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற விதிமுறைகளை அனைவரும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத 1.45 கோடி பேர் விரைவாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். வரும் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x