Published : 09 May 2016 11:26 AM
Last Updated : 09 May 2016 11:26 AM

அதிமுக, திமுக ஊழல் மீது நடவடிக்கை எடுக்க 6 கட்சி கூட்டணி வெற்றி பெற வேண்டும்: பிரகாஷ் காரத் வலியுறுத்தல்

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் ஊழல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, 6 கட்சி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என, திருப்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசினார்.

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், திருப்பூர் தெற்கு கே.தங்கவேல், திருப்பூர் வடக்கு எம்.ரவி, அவிநாசி எம்.ஆறுமுகம், பல்லடம் க.முத்துரத்தினம் ஆகியோரை ஆதரித்து, அரிசிக்கடை வீதியில் நேற்று முன் தினம் இரவு நடந்த பிரச்சாரத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியைத் தேர்ந் தெடுப்பதற்கான, சிறப்புமிக்க வாய்ப்பு இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் ஊழலில் ஊறித் திளைக்கின்றன. திராவிட இயக்கத்தின் முற்போக்கு, ஜனநாயகப் பாரம்பரியத்தில் இருந்து திமுகவும், அதிமுகவும் வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன. கடந்த 50 ஆண்டுகளில், முதல் முறையாக இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, தமாகா அணி நம்பகமான மாற்றாக உருவெடுத்துள்ளது.

இந்த 6 கட்சிகள் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட முன் வந்துள்ளன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, என்பது புதிய அரசியல் அத்தியாயமாகத் திகழும்.

மத்தியில் பாஜக அரசு அமைந்துள்ளது. இந்த அரசு பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நலன்களைப் பாதுகாப்பதற்காக சாமானிய மக்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இதைப்பற்றி தமிழகத்தை ஆளும் அதிமுக வாய் திறப்பதில்லை. மோடி அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு அதிமுக மட்டுமல்ல, திமுகவும் அதை எதிர்த்து வாய் திறக்கவில்லை.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பண பலத்தைக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெறப் பார்க்கிறார்கள்.

ஒருவேளை அதிமுகவுக்கு எதிராக திமுக வெற்றி பெறுமானால் அவர்கள் உயர்மட்ட ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் இந்த இரு கட்சிகளும் ஊழலில் சகோதரர்களாக உள்ளன. இரு கட்சிகளின் ஊழல் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, 6 கட்சி கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x