Published : 29 May 2022 05:49 PM
Last Updated : 29 May 2022 05:49 PM

உள்நாட்டு உற்பத்தியையும், வரி வருவாயையும் ஒப்பிட்டு பேசுவதே தவறானது : நாராயணன் திருப்பதி

சென்னை: பிரதமர் கலந்துகொண்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது தவறு. உள்நாட்டு உற்பத்தியையும், வரி வருவாயையும் ஒப்பிட்டு பேசுவதே தவறானது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் 9 சதவீதம்;மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 6 சதவீதம்; மொத்த ஏற்றுமதியில் 8.4 சதவீதம்; ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம்; கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம்; தோள் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. ஆனால் மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 சதவீதம் மட்டுமே என்று பிரதமர் கலந்து கொண்ட விழாவில் பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிரதமர் கலந்துகொண்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது தவறு. உள்நாட்டு உற்பத்தியையும், வரி வருவாயையும் ஒப்பிட்டு பேசுவதே தவறானது. ஒரு குடும்பத்தில் கணவருடைய பங்கு முக்கியமானதா? மனைவியுடைய பங்கு முக்கியமானதா? என்றால் அது சரியான வாதமாக இருக்குமா? கணவன், மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் என்று குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சமம் தானே? அவரவர்களின் தேவைகேற்ப பகிர்ந்தளிக்கப்படுவது தானே நியாயம்?

பல புள்ளி விவரங்களை குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்,விவசாய உற்பத்தியில் முதல் பத்து மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பதை குறிப்பிடாதது ஏன்? பல மாநிலங்கள் விவசாயம் சார்ந்து இயங்கி வருகின்ற நிலையில், விவசாயத்திற்கு வரி வருவாய் இல்லை என முதல்வருக்கு தெரியாதா? தமிழகத்தில் தயாரிக்கப்படும் காருக்கும், ஜவுளிக்கும், தோல் பொருட்களுக்கும் வரி உள்ளதே? ஆனால், விவசாய பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லையே? தமிழகத்தில் தயாரிக்கப்படும் பத்து லட்ச ரூபாய் காரை வாங்கும் பிற மாநிலத்தவர்கள் வரி செலுத்தும் நிலைியல், பிற மாநிலங்களில் விளையும் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய பொருட்களுக்கு நாம் வரி செலுத்தவில்லையே?

இயற்கை வளங்கள்,புவி சார்ந்த நிலை, சமூக பொருளாதார சூழ்நிலை, மனித ஆற்றல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால்தான் சில மாநிலங்களில் கட்டமைப்புகள் பெருக்கப்பட்டு அதனால் முதலீடுகள் அதிகரித்து உற்பத்தி மாநிலங்களாக திகழ்கின்றன. கார்கள் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கேற்ற கட்டமைப்புகளை உருவாக்கியதில் மத்திய அரசிற்கு பெரும் பங்குள்ளது என்பதை மறுக்க முடியுமா? துறைமுகம், விமான நிலையங்கள், சாலை வசதிகள், ரயில் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்திருப்பதில் மத்திய அரசு மற்றும் பிற மாநிலத்தவர்களின் பங்களிப்பை மறந்து விட முடியுமா? இங்கு உற்பத்தியாகும் பொருட்களை பிற மாநிலத்தவர்களும் வாங்குவதாலேயே உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்பு பெருகுவதோடு, வரி வருவாய் அதிகரித்து தனி மனித வருவாய் சிறக்கிறது என்பதை முதல்வர் மறுத்துவிட முடியுமா?

இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில், 5 மாநிலங்கள் ஒட்டுமொத்த் உள்நாட்டு உற்பத்தியில் 46.6 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. 8 வடகிழக்கு மாநிலங்களின் பங்கீடு 2.8 சதவீதம் மட்டுமே. விகிதாசார அடிப்படையில் வரி வருவாயை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்கள் எந்த விதத்திலும் வளர்ச்சியடையாது. விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருக்கும் இம்மாநிலங்களில் கட்டமைப்புகளை பெருக்காது இருந்தது யார் செய்த தவறு?

உத்தரப்பிரதேசம்,மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பின்தங்கியிருப்பதற்கு காரணம் கட்டமைப்புகளை பெருக்காததே.வடகிழக்கு மாநிலங்கள் எட்டிலும் அடிப்படை கட்டமைப்புகள் கூட இதுவரை எட்டிப்பார்க்காத நிலையில், கடந்த 8 வருடங்களில் மிக சிறந்த வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பெற்று வருகின்றன அம்மாநிலங்கள்.

ஒரு மனிதனின் அங்கங்களில் கையோ, காலோ மட்டும் வீங்கியிருந்தால் அதற்கு பெயர் வீக்கம். ஆனால் ஒட்டுமொத்த உடம்பே வளர்ச்சியடைந்தால் அது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு, இந்தியாவிற்கு தேவை வளர்ச்சி தானே தவிர வீக்கம் அல்ல.வாழ்வோம், வாழ வைப்போம் என்பதே தமிழர் பண்பாடு என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்வாரா? என்று அவர் கூறியுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x