Published : 27 May 2022 06:13 AM
Last Updated : 27 May 2022 06:13 AM

அன்னதானம் வழங்குவதில் பாகுபாடு; கோயில் செயல் அலுவலர் உட்பட 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்: அறநிலைய துறை ஆணையர் நடவடிக்கை

மாமல்லபுரம்: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாகுபாடு காட்டியதாக மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் செயல் அலுவலர் மற்றும் சமையலர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

மாமல்லபுரதில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் சுமார் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஸ்தலசயன பெருமாள் கோயிலில் கடந்த 2021-ம் ஆண்டு அன்னதானம் சாப்பிட வந்த நரிக்குறவ பெண்களை கோயில் நிர்வாகம் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர் சேகர்பாபு, பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்களை கோயிலுக்கு அழைத்து வந்து உணவளித்தார். மேலும், அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் அடங்குவதற்குள், கோயில் நிர்வாகத்தினர் தங்களுக்கு வேண்டியவர்களை சேரில் அமர வைத்தும், சிலரை தரையில் அமர வைத்தும் அன்னதானம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த 24-ம் தேதி திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆய்வு செய்தார்.

அப்போது, சிலரை தரையில் அமரவைத்து உணவு சாப்பிட வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக எம்எல்ஏ பாலாஜி அளித்த புகாரின்பேரில், செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி, சமையலர் குமாரி ஆகிய இருவரும் பணியிடை செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x