Published : 26 May 2022 07:53 AM
Last Updated : 26 May 2022 07:53 AM

திறந்தவெளி நூலகத்தில் பழைய பாடப் புத்தகங்கள்: திறக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுமா?

திருச்சி: திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 2018-ல், ரூ.20 லட்சம் செலவில் திறந்தவெளிநூலகம் திறக்கப்பட்டது.

இங்கு, பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இங்குள்ள புத்தகங்களை எடுத்துச் செல்லும் வகையில் இலவச புத்தகப் பரிமாற்ற நிலையமாக செயல்பட்டு வந்தது. இதனால், இந்த நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நூலகத்தில் ஆங்கிலம், தமிழ் நாவல்கள், கவிதைகள், பொதுஅறிவு, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருந்தன.

பலர் தங்களிடம் உள்ள படித்த புத்தகங்களை இங்கு வைத்துவிட்டு, அதற்கு மாற்றாக வேறு புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், இந்த நூலகத்தில் இடம் பெற்றிருந்த பல தரப்பட்ட நல்ல புத்தகங்களை பலரும் எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக பழைய பாடப்புத்தகங்களை வைத்துச் சென்றுவிடுகின்றனர்.

இதனால், தற்போது இந்த திறந்த வெளிநூலகத்தில் பெரும்பாலும் பழைய பாடப்புத்தகங்களே அதிகம் ஆக்கிரமித்துள்ளன. இதன் காரணமாக தற்போது இங்கு மாணவர்கள், பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இதுகுறித்து, திறந்த வெளி நூலகத்துக்கு தினமும் புத்தகம் வாசிக்கவரும் சுந்தரம்(65) கூறுகையில், அண்மைக்காலமாக இங்குவந்த பலர், தங்களது பழைய கல்லூரி புத்தகங்களை கொண்டு வந்து வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இங்குள்ள பல நல்ல புத்தகங்களை எடுத்துச் சென்று விடுகின்றனர். அவற்றை படித்துவிட்டு மீண்டும் இங்கு கொண்டு வந்து வைப்பதும் இல்லை. இதனால், தற்போது இங்கு பொதுமக்களுக்கு தேவையான ஒரு நல்ல புத்தகம் கூட இல்லை.

இங்குள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை பொறியியல் பாடப் புத்தகங்களாகவே உள்ளன. அந்தப்புத்தகங்களும் பழைய பாடத்திட்டம் என்பதால், தற்போது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் பயனில்லாமல் உள்ளது.

எனவே, இந்த திறந்தவெளி நூலகத்துக்கென தனியாக ஒரு ஊழியரை நியமித்து, இங்கு கொண்டு வருபவர் பெயர், முகவரி, வைக்கும் புத்தகங்கள் மற்றும் எடுத்துச் செல்லும் புத்தகங்களின் விவரம் போன்றவற்றை குறித்துக் கொள்ளவும், அரிய புத்தகங்களாக இருந்தால், அவற்றை எடுத்துச் செல்பவர்கள் படித்துவிட்டு மீண்டும் இங்கு கொண்டு வந்து வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த திறந்தவெளி நூலகம் திறக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இதற்கான கட்டமைப்பு வசதிகளை மட்டுமே நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். இதன் செயல்பாடுகள் நூலகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன’’ என்றனர்.

இதையடுத்து, நூலக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, திறந்தவெளி நூலகத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனவும், இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x