Published : 24 May 2022 10:31 PM
Last Updated : 24 May 2022 10:31 PM

“திராவிட மாடல் எதையும் இடிக்காது... உருவாக்கும்; யாரையும் தாழ்த்தாது... சமமாக நடத்தும்” - ஸ்டாலின் விளக்கம்

சேலம்: ‘திராவிட மாடல்’ஆட்சி குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது... உருவாக்கும்; எதையும் சிதைக்காது... சீர்செய்யும்; யாரையும் பிரிக்காது... அனைவரையும் ஒன்று சேர்க்கும்; யாரையும் தாழ்த்தாது... அனைவரையும் சமமாக நடத்தும்” என்றார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற, "ஓயாத உழைப்பின் ஓராண்டு" என்ற தலைப்பிலான அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சி குறித்து அளித்த விளக்கம்: “அனைவருக்குமான ஆட்சி இது. அனைவருக்கும் பயனளித்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. அனைவருக்கும் பயனளிக்கப் போகும் ஆட்சி இதுதான். இது எனது அரசு என்று நான் எப்போதும் சொன்னதில்லை. இது நமது அரசு என்றுதான் நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த ஆட்சியை நான் மட்டும் நடத்தவில்லை. நாம் அனைவரும் சேர்ந்துதான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஆட்சியை, நாம் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்கிறோம். ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்கிறேன், சமத்துவமும் - சமூகநீதியும் என்னவென்று கூட சிந்திக்கத் தெரியாதவர்களிடம் இருந்து இந்தக் கேள்வி எழுகிறது. இல்லாத போலிப் பிம்பங்களைக் கட்டியமைக்கத் தெரிந்த அவர்களுக்கு, இருப்பதைக் கண் திறந்து பார்க்க மனமில்லை.

ஆனால் பெரியார், அண்ணா, கலைஞர் என இந்தத் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வளர்ப்பாக இருக்கும் நமக்கு ‘திராவிட மாடலை’ விளக்கும் கடமை இருக்கிறது. மானுட சமுதாயத்தை மேம்படுத்தும் முற்போக்குக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள், திராவிட மாடலை எட்டுத்திசைக்கும் விளக்கிச் சொல்லுங்கள்.

நாம் அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த ஆட்சியின் இலக்கணமாக, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தும் அடங்கியிருக்கிறது.

'திராவிடம்' என்ற சொல் ஒரு காலத்தில், இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக, வழங்கப்பட்டு வந்திருந்தாலும் இன்று 'திராவிடம்' என்றால் ஓர் அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது. அத்தகைய அரசியல் தத்துவத்தை எத்தனையோ பெரும் மேதைகள் சேர்ந்து நமக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் சென்றிருக்கிறார்கள்.

பண்டித அயோத்திதாசரும், தந்தை பெரியாரும் நமக்கு திராவிடவியல் கோட்பாட்டை உருவாக்கித் தந்தார்கள். சர்.பிட்டி.தியாகராயரும், டி.எம்.நாயரும், டாக்டர் நடேசனாரும் உருவாக்கிய தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம்.

'தமிழை வளர்த்தல் ஒன்று, சாதியை ஒழித்தல் மற்றொன்று' என்று பாவேந்தர் பாரதிதாசன் நமக்கு மொழியுணர்வையும், சமூக விடுதலையையும் விதைத்துச் சென்றிருக்கிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், டாக்டர் முத்துலட்சுமி அவர்களும் நமக்கான பெண் விடுதலைச் சிந்தனைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

இனமான உணர்வைப் பெறவும்; மாநில உரிமைகளுக்காக வாதிடுவதற்கும், பேரறிஞர் அண்ணாவும், பேராசிரியரும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். ஒரு நவீன தமிழகமானது எந்தெந்த வகையில் எல்லாம் அமைய வேண்டும் என்பதை ஐந்து முறை இந்தத் தமிழகத்தை ஆண்டு நமக்கு காட்டியிருக்கிறார் நம்முடைய தலைவர் கலைஞர்.

சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அத்தகைய இயக்கம் நடத்தும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.

தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல், சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும் அண்ணாவும் தலைவர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். இதைத்தான் திராவிட மாடல் ஆட்சி உருவாக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டில் இயற்கை வளம் இருக்கிறது. இங்கு சீரான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறது. மனித வளம் உள்ளது. சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது. உலகறிந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் உலகில் நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழ்கிறார்கள். இந்த அடித்தளத்தை கொண்டு வளர நினைக்கிறோம். நம்மால் வளர முடியும். நம்மை வளர்க்க திராவிட மாடலால் மட்டும்தான் முடியும்.

திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது... உருவாக்கும். திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது... சீர்செய்யும். திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது... அனைவரையும் ஒன்று சேர்க்கும். திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது... அனைவரையும் சமமாக நடத்தும். திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது... தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அத்தகைய அடிப்படையில்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு திட்டங்கள் தீட்டினாலும், ஓர் ஏழை எளிய நரிக்குறவர் இளம்பெண்ணின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்கும் அரசுதான் இந்த அரசு.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில், இருளர் இன மக்கள், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளையும் ஏற்று, அவர்கள் மனம் குளிரும் திட்டங்களைத் தீட்டுவதுதான் இந்த அரசு. இது ஒரு கட்சியின் அரசல்ல, ஓர் இனத்தின் அரசு.

இந்த ஐந்து ஆண்டுகள் மட்டுமல்ல, இனி தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகமே ஆளுமேயானால், தமிழ்நாடு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் சிறந்த மாநிலமாக ஆகும்.

பொதுமக்கள் நமக்கு அளித்த ஆட்சி உரிமையின் மூலமாக பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் ஆட்சியை நாம் வழங்கி வருகிறோம். இதுதான் மக்களாட்சித் தத்துவம். நிதிநிலைமை மட்டும் இன்னும் சீராக இருக்குமானால், இன்னும் ஏராளமான திட்டங்களைத் தீட்டி இருக்க முடியும். ஆனாலும் படிப்படியாக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அண்ணாமீது ஆணையிட்டுச் சொல்கிறேன் உறுதியாக நாங்கள் நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபடுவோம்.

நான் கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன். இந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளைச் செய்துள்ளோம் என்றால், இத்தகைய நிதி நெருக்கடியைப் பொறுத்துக் கொண்டுதான் செய்திருக்கிறோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x