Published : 24 May 2022 12:48 PM
Last Updated : 24 May 2022 12:48 PM

உங்கள் குரல் - தெருவிழா நிகழ்ச்சி எதிரொலி | கிள்ளை பேரூராட்சி 4-வது வார்டில் 24 மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு: 10 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கைக்கு உடனடித் தீர்வு

கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 4- வது வார்டு யாதவர் தெருவுக்கு 10 ஆண்டுகளாக குடிநீர் செல்லாமல் இருந்த குடிநீர் குழாயை பேரூராட்சி ஊழியர்கள் சரி செய்து, குடிநீர் வழங்கினர்.

கடலூர்: கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நடந்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சியின் எதிரொலியாக 4 -வது வார்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி தெரிவித்த கோரிக்கையை ஏற்று, அந்த வார்டுக்கு உட்பட்ட பொன்னந்திட்டு யாதவர் தெருவுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

பொது மக்கள் தாங்கள் வாழும் பகுதியின் அடிப்படைத் தேவைகளை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், ஊர்கள் தோறும் நமது ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்வு நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நேற்று முன்தினம் இந்நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக இப்பேரூராட்சியின் அடிப்படைத் தேவைகள், குறைகள் தொடர்பாக குடியிருப்புவாசிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வசதியாக ‘உங்கள் குரல்’ பதிவு எண் நமது நாளிதழில் வெளியிடப்பட்டது.

இதில், கிள்ளை பேரூராட்சிக் குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் குரல் பதிவு மூலம் தங்கள் குறைகளை தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற கிள்ளை பேரூராட்சித் தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் கிள்ளை எஸ். ரவிந்திரன், செயலர் அலுவலர் செல்வி ஆகியோர் இதை கவனத்துடன் பதிவு செய்து கொண்டு, அதற்குரிய பதில்களை அளித்தனர்.

10-வது வார்டில் பகுதி நேர ரேஷன் கடையும் அமைகிறது

கிள்ளை பேரூராட்சியின் 10-வது வார்டை சேர்ந்த செஞ்சி என்பவர், தங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லை என்று ‘உங்கள் குரல் - தெரு விழா’ கூட்டத்தில் முறையிட்டார். நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியத்தை கிள்ளை பேரூராட்சி துணைத்தலைவர் கிள்ளை எஸ். ரவிந்திரன் சந்தித்து, இது குறித்து கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, 10 வது வார்டுக்கு பகுதி நேர ரேஷன் கடையை திறக்க மாவட்ட வழங்கல் அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அங்கு பகுதி நேர ரேஷன் கடை அமைய உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவரான கதிரவன் என்பவர், “நான் குடியிருக்கும் பொன்னந் திட்டு 4-வது வார்டு யாதவர் தெருவிற்கு சுமார் 10 ஆண்டுகளாக பேரூராட்சியின் குடிநீர் செல்லவில்லை. எப்போது சரி செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். “உடனே சரிசெய்யப்படும்” என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை பேரூராட்சி துணைத் தலைவர் ரவிந்திரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்தனர்.

யாதவர் தெருவுக்கு செல்லும் வாய்க்கால் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு மதகு கட்டும் போது, குடிநீர் இரும்பு குழாயை நசுக்கி அடைபட்டு விட்டது. ‘இதை சரிசெய்ய சாலையை குறுக்கே வெட்ட வேண்டும். இதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி வேண்டும்’ என்று கூறி 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது கள ஆய்வின் போது தெரிய வந்தது. இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று, பேரூராட்சி பணியாளர்கள் சாலையில் கீழ் பகுதியில் ஜாமர் மூலம் துளை போட்டு, புதிய இரும்பு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x