Last Updated : 22 May, 2016 11:10 AM

 

Published : 22 May 2016 11:10 AM
Last Updated : 22 May 2016 11:10 AM

ம.ந.கூட்டணியை பின்னுக்குத் தள்ளி 32 தொகுதிகளில் 3-வது இடத்தில் பாஜக

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. அதிகபட்சமாக நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் 46 ஆயிரத்து 413 வாக்குகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் பாஜக 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாஜக அதிக வாக்குகளைப் பெற்றதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

3-வது இடத்தைப் பிடித்தது

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தி 3-வது இடத்தை பாஜக பிடித்தது. அதில் மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது.

விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 19 ஆயிரத்து 167, வாக்குகளையும் தியாகராய நகரில் போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா 19 ஆயிரத்து 888 வாக்குகளையும் பெற்றனர். வேளச்சேரியில் பாஜக வேட்பாளர் டால்பின் ஸ்ரீதரன் 14 ஆயிரத்து 472 வாக்குகளைப் பெற்றார்.

கொங்கு மண்டலத்தில்

சென்னை புறநகர் தொகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, அம்பத்தூர், மாதவரம் ஆகிய தொகுதிகளில் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் ஆலந்தூரில் பாஜக 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

கொங்கு மண்டலத்தில் தாராபுரம், உதக மண்டலம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, உடுமலைப்பேட்டை ஆகிய 10 தொகுதிகளில் பாஜக 3-வது இடத்தைப் பிடித்தது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் 33 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்றார். ஓசூரில் பாஜக 28 ஆயிரத்து 850, வேதாரண்யத்தில் 37 ஆயிரத்து 86 வாக்குகளைப் பெற்றுள்ளது. 32 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணியை வீழ்த்தி பாஜக 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாஜக தேர்தல் வரலாறு

1967-ல் 24 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜன சங்கம் 22 ஆயிரத்து 745 வாக்குகளைப் பெற்றது. 1980-ல் ஜனசங்கம் பாஜகவாக மாறிய பிறகு 10 தொகுதிகளில் போட்டியிட்டு 13 ஆயிரத்து 177 வாக்குகளை மட்டுமே பெற்றது.

1996 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் பாஜக அடியெடுத்து வைத்தது. 2001-ல் திமுக கூட்டணியில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4-ல் வென்றது.

தனித்துப் போட்டியிட்டு 2006-ல் 2.02 சதவீதம், 2011-ல் 2.22 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக தற்போது 2.8 சதவீத வாக்குகளைப் பெற்று அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமகவுக்கு அடுத்த கட்சியாக உருவெடுத்துள்ளது. தேமுதிக, மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பாஜகவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x