Published : 19 May 2022 06:06 AM
Last Updated : 19 May 2022 06:06 AM

ரூ.16.7 கோடி நிதி ஒதுக்கீட்டில் காரைக்காலில் விரைவில் விண்வெளி கண்காட்சி மையம்: புதுச்சேரியில் காப்புரிமை தகவல் மையம் அமைகிறது

லாஸ்பேட்டை அறிவியல் மைய கோளரங்கத்தில், அறிவியல் புத்தாக்க மையத்தை திறநது வைத்து பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை. உடன் முதல்வர் ரங்கசாமி, மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் விரைவில் ரூ.16.7 கோடியில் விண்வெளி கண்காட்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 4.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அருங்காட்சியக தினத்தைமுன்னிட்டு மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம், புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் புத்தாக்க மையம் திறக்கப்பட்டது.

ஆளுநர் தமிழிசை புத்தாக்க மையத்தையும், முதல்வர் ரங்கசாமி புத்தாக்க திறன் மையத்தையும் திறந்து வைத்தனர். இந்த அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழி செய்யப் பட்டிருக்கிறது. பெங்களூரில் உள்ளதொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல்கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறது. இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதன் மூலம், எந்தப் பள்ளியில் படிக்கும் எந்தகுழந்தையும் எந்த ஆராய்ச்சியையும் செய்யலாம்.

இது, புதுச்சேரி அரசும் மத்திய கலாச்சார அமைச்சகமும் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி.

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு எவ்வளவு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதற்கும், மக்கள் எவ்வளவு பலம் பெறுவார்கள் என்பதற்கும் இந்த கண்காட்சியும் ஆராய்ச்சி மையமும் உதாரணம்.

வாழத் தகுந்த பூமியாக, முழுமையாக மறுசுழற்சிக்கு சாத்தியமுள்ள பூமியாக இது இருக்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார்.

குப்பைகளை அகற்ற ஒருரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள். புதுச்சேரியை, குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வருடன் கலந்தாலோசனை செய்து திட்டங்களை வகுத்து குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாற்றும் வகையில் விஞ்ஞானபூர்வமாக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை இங்கு கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியத்தின் இயக்குநர் சாதனா, முதுநிலை அறிவியல் அதிகாரி சகாயம் ஆல்பிரட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்மையம் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் ரூ.1.50 கோடி செலவில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.இது புதுவையில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மாணவர்களை புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த உதவும். மேலும், அறிவியல், தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளை வழங்கும்.

இங்கு கண்டுபிடிப்பு மையம், உடைத்தல் மற்றும் உருவாக்குதல், உடைந்த பொருட்களில் இருந்து செய்தல், யோசனை பெட்டி, வடிவமைப்பு ஓவிய அறை ஆகியவை இருக்கும். இந்த மையத்துக்கு மூன்றாண்டுக்கு பராமரிப்பு செலவாக ரூ. 45 லட்சம் தரப்படும்.

மேலும், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் ரூ.16.70 கோடியில் விண்வெளி கண்காட்சி மையம், புத்தாக்க மையம் மற்றும் எண்முறை கோளரங்கம் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறில் 4.25 ஏக்கர் நிலம் அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் ரூ.1.75 கோடியில் காப்புரிமை தகவல் மையத்தை நிறுவுவதற்கும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடமிருந்து கொள்கை ஒப்புதலை பெற்றுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார நலனுக்கான அறிவுசார் சொத்துரிமைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தனர்.

புதுச்சேரி அரசும் மத்திய கலாச்சார அமைச்சகமும் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி. குழந்தைகளின் ஆராய்ச்சிக்கு இங்கே வழி செய்யப்பட்டிருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x