Published : 16 May 2022 10:47 AM
Last Updated : 16 May 2022 10:47 AM

மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்வது வியப்பாக உள்ளது: ஓபிஎஸ்

சென்னை: மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கலந்தாலோசித்து, நூல் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாடு நாடாக இருக்க வேண்டுமெனில், அங்குள்ள மக்கள் யாவரும் நலமுடன் வாழ வேண்டுமெனில், விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டுமெனில், குறைவில்லா விளைச்சல் இருக்க வேண்டும்; எல்லா வளங்களும் பெற்றுத் திகழ வேண்டும்; கடத்தல், பதுக்கல் ஆகியவற்றில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதோடு, இயற்கை வளமும், செயற்கை வளமும் பெற்று விளங்கும்போது விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

தமிழகத்தில் தற்போது அனைத்துப் பொருட்களின் விலையும் விஷம் போல் ஏறியிருக்கின்ற சூழ்நிலையில், நூல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் நிதியாண்டு துவக்கத்தில் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பஞ்சு தற்போது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 162 விழுக்காடு விலை உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், ஜவுளித் தொழில் சந்தித்து வருகின்ற பிரச்சனைகளுக்கு காரணங்களாக ஆயத்த ஆடைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட இருக்கிறது என்பதும், இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 11 விழுக்காடு வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டன.

இந்தப் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கைகள் விடுத்ததோடு மட்டுமல்லாமல், மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். இதனையடுத்து, ஆடைகள் மீதான 12 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு மட்டுமல்லாமல், பஞ்சுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. இதனைத் தொடர்ந்து பஞ்சு விலை குறையும் என்று அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் எதிர்பார்த்தனர். ஆனால், நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும், உற்பத்தி செலவு அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருவதாகவும், தொடர்ந்து உற்பத்தி செய்ய இயலாத நிலையில், நூல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது வியப்பாக உள்ளது. வாணிகம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சினை பதுக்கி வைத்து, பற்றாக்குறை ஏற்படுத்தி, விலை ஏற்றத்திற்கு யாராவது காரணமாக இருக்கிறார்களா என்பதையும், விலை உயர்விற்கு என்ன காரணம் என்பதையும் கண்டறிய வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு இருக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கலந்தாலோசித்து, நூல் விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x