Published : 16 May 2022 06:28 AM
Last Updated : 16 May 2022 06:28 AM

பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு அப்பாவு கோரிக்கை

திருப்பூர்: பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு கலந்து கொண்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொங்கு மண்டலம் என்றாலே நூற்பாலைகள்தான் நினைவுக்கு வரும். பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை நூற்பாலைகள் அளிக்கின்றன. இத்துறை சார்ந்த உற்பத்தியாளர்கள், நூல் விலை உயர்வைக் கண்டித்து மே 16 (இன்று), 17-ம் தேதி இரு தினங்கள் உற்பத்தி நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிந்தேன்.

இந்தியாவில் 3.4 கோடி பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 3.2 கோடி பேல்தான் தேவையாக உள்ளது. தேவைக்கு அதிகமாக நம்மிடம் பருத்தி உற்பத்தி உள்ளது. விவசாயிகளிடமிருந்து உரிய பருத்தி வியாபாரிகளுக்கு வந்துவிட்டது. அவற்றை கொள்முதல் செய்து பதுக்கி வைத்துள்ளனர். பின்னலாடைத் தொழில் செய்பவர்கள் ஆறு மாதங்களுக்கு முன் ஆர்டர் பெற்றிருப்பார்கள். தற்போது பருத்தி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது‌. இதனால் தொழில் செய்ய முடியவில்லை.

பின்னலாடை நிறுவனங்களின் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசியபிறகே இறக்குமதி வரியை ரத்து செய்தனர்.

பருத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியதே விலை உயர்வுக்குக் காரணம். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி தமிழகத்தின் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்.

முக்கியமாக பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒருவர் எவ்வளவு பருத்தியை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று அளவு நிர்ணயிக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்தால் நிச்சயமாக தொழில் நல்லபடியாக நடக்கும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x